சென்னை: சென்னை அம்பத்தூரில் உள்ள சேது பாஸ்கரா பள்ளி வளாகத்தில் சிவக்குமாரின் திருக்குறள் 100 உரை தொடர்பான மாணவர்களின் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுடன் உரையாற்றினார்.
அப்போது அவர் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய சிவகுமார், “என்னுடைய இளமைக்காலம் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது. நீங்கள் எல்லாம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகள். நான் குழந்தையாக இருந்தபோதே அப்பா இறந்துவிட்டார். உடன் பிறந்த அண்ணனும் பிளேக் நோயினால் இறந்துவிட்டார். படிப்பதற்கெல்லாம் வசதி இல்லை.
பஞ்ச காலத்தில் கற்றாழை கிழங்கு ரசம் தான் சாப்பிட்டிருக்கேன். அர்சி சோறு என்பது பொங்கல் பண்டிகையில் மட்டும்தான் சாப்பிடுவோம். அப்போது பள்ளிகூடத்திற்கு கட்டடம் கிடையாது. மண்ணில் தான் எழுதி பழகுவோம். நான் வெள்ளைக்காரன் ஆட்சி செய்த போது பிறந்தவன். அப்போது தான் நான் படித்தேன். திடீரென ஒரு நாள் எல்லோரையும் அழைத்து கொடி ஏற்றி ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தார்கள். கேட்டதற்கு நாடு சுதந்திரம் அடைந்துவிட்டதாக கூறினார்கள்.
சுதந்திரம் என்றால் ஆரஞ்சு மிட்டாய் தான் நியாபகம் வருகிறது. பள்ளியில் படிப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். தனியார் பள்ளியில் படித்தேன். அப்போது இரண்டாம் வகுப்புக்கு இரண்டு ரூபாய் மூன்றாம் வகுப்பு மூன்று ரூபாய் நான்காம் வகுப்பு 4 ரூபாய் என கல்வி கட்டணம் வசூலித்தனர். கல்வி கட்டணம் அதிகமாக இருந்ததால் அக்காவை பள்ளிக்கு அனுப்பவே இல்லை. மூன்றாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டார்.
ஏழு வருடங்கள் பள்ளி படிப்பை நான் 350 ரூபாய்க்குள் முடித்துவிட்டேன். இப்போது எல்கேஜிக்கே லட்சக்கணக்கில் கேட்கிறார்கள். பள்ளி முடியும்போத நண்பர்களுடன் இணைந்து குரூப் போட்டோ எடுப்பதற்கு கூட என்னிடம் ஐந்து ரூபாய் இல்லை. என்னால் அந்த குரூப் போட்டோ எடுக்க முடியவில்லை. நான் 175 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். 87 கதாநாயகிகளை கட்டிப்பிடித்து நடித்துள்ளேன்.
இதையும் படிங்க: ஏ.வி.எம். நிறுவனம் மீதான தடையை எதிர்த்து பேரன் குகன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு |
நான்கு கோடி ஃப்ரேம்களின் என் முகம் உள்ளது. ஆனால் 5 ரூபாய் போட்டோவில் என் முகம் இல்லை. இப்போதும் குரூப் போட்டோக்களை பார்த்தால் கண்ணீர் வந்துவிடும். அதுமட்டுமின்றி 50 வருடங்களுக்கு பின்னர் அதே பள்ளியில் நண்பர்கள் உயிருடன் இருந்த ஆசிரியர்ளுடன் மீண்டும் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அது மட்டுமல்லாமல் அந்த பள்ளியை தத்தெடுத்து மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறேன்.
உலகில் உள்ள எல்லா மக்களும் எல்லா வளங்களும் பெற்று நன்றாக வாழ வேண்டும் என புன்சிரிப்பையும் 100 பூக்களை பற்றி கூஉறியிருக்கிறார். அந்த பூக்களை எல்லாம் மானசீகமாக தூவி நீங்கள் எல்லோரும் பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்” என பேசினார். தொடர்ந்து அந்த 100 பூக்களின் பெயரையும் மூச்சு விடாமல் சொல்லி மாணவர்களை வாழ்த்தினார் சிவகுமார்.