சென்னை: தமிழ் சினிமா இந்தாண்டு பரிதாபமான நிலையில் உள்ளது. ஆண்டு தொடங்கிய நான்கு மாதங்களில் வெளியான எந்த படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. முன்னணி நடிகர்களின் படமும் வெளியாகவில்லை. திரையரங்கிற்கு வராமல் இருந்தவர்களை கில்லி ரீ-ரிலீஸ் ஆகி, ரசிகர்கள் பட்டாளத்தை மீண்டும் திரையரங்கை நோக்கி படையெடுக்க வரவழைத்துள்ளது எனலாம்.
இந்த கோடை விடுமுறையாவது பார்வையாளர்களை திரையரங்குகளை நோக்கி வரவழைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், கோடை விடுமுறையை ஒட்டி, ரசிகர்கள் இந்த வாரத்தின் புதுவரவாக தமிழில் அரண்மனை 4 (Aranmanai 4), குரங்கு பெடல் (Kurangu Pedal) உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன.
அரண்மனை 4:சுந்தர் சி இயக்கத்தில் நடிகை தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம், அரண்மனை 4. இதற்கு முன்னர் வெளியான அரண்மனை சீரிஸ் (Aranmanai series) படங்களைப் போல, இப்படமும் ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
குரங்கு பெடல்:மதுபான கடை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கமலக்கண்ணன் இயக்கியுள்ள படம், குரங்கு பெடல். எழுத்தாளரும், இயக்குனருமான ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள் கதை'-ஐ மையமாகக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார். சிறுவயது ஞாபகங்களை நினைவுபடுத்தும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்சன்ஸ் சார்பில் வெளியிட்டுள்ளார். இப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அக்கரன்:தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், அக்கரன். அருண் கே.பிரசாத் இயக்கியுள்ள இப்படம் க்ரைம் த்ரில்லர் படமாக அமைந்துள்ளது. மேலும், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள சபரி, நின்னு விளையாடு ஆகிய படங்களும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கோடை காலத்தையும் பொருட்படுத்தாமல், வெயிலின் தாக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்கள் இத்திரைப்படங்களின் வரவால், திரையரங்குகளை நோக்கி வரத் தொடங்குவார்கள் எனத் தெரியவருகிறது.
இதையும் படிங்க:சினிமாவில் சினிமா பற்றி எடுத்தால் ஓடாதா? - ஸ்டார் நாயகன் கவின் நம்பிக்கை! - Kavin About Harish Kalyan