கோயம்புத்தூர்: “பிளானட்டரி பரேடு” எனப்படும் சூரியகோள்கள் ஓரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வைத் தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோவை அவினாசி சாலை கொடிசியா அருகே உள்ள அறிவியல் மையத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அங்கு நேற்று (ஜன.23) முதல் வரும் ஜனவரி 25ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு வானில் ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கும் நிகழ்வைக் காண முடியும். செவ்வாய் (Mars), வெள்ளி (Venus), வியாழன் (Jupiter) , சனி (Saturn), நெப்டியூன் (Neptune) மற்றும் யுரேனஸ் (Uranus) ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வைக் காணக் கோவை அறிவியல் மையத்துக்கு ஏராளமான குழந்தைகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
இதையும் படிங்க: ‘மேக் இன் இந்தியா’ தெரியும்; அதென்ன ‘மேக் இன் ஸ்பேஸ்’-இல் செயற்கை இதயம்?
ஆனால், நேற்று மாலை நிலவிய மேகமூட்டம் காரணமாக அறிவியல் மையத்திலிருந்து வானில் கோள்கள் அணிவகுக்கும் நிகழ்வுகளைக் காண முடியவில்லை. இதனால், இதைக் காணப் பெற்றோருடன் ஆர்வமாக வந்த குழந்தைகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்துப் பேசிய கிர்தன்யா, “இன்று மிகவும் கூட்டமாக இருந்தது. அதனால், கோள்கள் அணிவகுப்பைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் தெளிவாகக் கோள்கள் அணிவகுப்பு தெரியவில்லை. ஜூப்பிட்டர் கோள்ளை மட்டும்தான் பார்க்க முடிந்தது. நாளை மீண்டும் வந்து பார்ப்பேன். அறிவியல் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.
இது குறித்துப் பேசிய ரோகிணி, “மேக மூட்டத்தால் ஆறு கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பதைக் காண முடியவில்லை. இருந்தாலும் இந்த சமயத்தில் நாங்கள் அறிவியல் மையத்தில் இருப்பவர்கள் மூலம் இந்த நிகழ்வுக்குப் பின் உள்ள அறிவியல், புவியியல் பற்றித் தெரிந்து கொண்டோம்.
வரும் நாட்களில் மீண்டும் இங்கு வந்து ஆறு கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பதைக் காண ஆர்வமாக உள்ளது. வரும் 25ஆம் தேதி வரை இந்த கோள்களைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை அறிவியல் மையம் ஏற்பாடு செய்துள்ளதால், வரும் ஜன.25 ஆம் தேதி கோள்கள் தெளிவாகத் தெரிவதற்கு வாய்ப்புகள் இருக்கும் என அதிகாரிகள் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
இதையடுத்து பேசிய தரணி, “இந்த நிகழ்வு அரிதாகக் காணப்படும் நிகழ்வு, என்பதால் ஆவலுடன் குழந்தைகளுடன் வந்துள்ளோம்” என்றார்.