ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கண்ணு பகுதியில் நந்தகுமார் என்ற தனியார் தொழிற்சாலை ஊழியரின் வீட்டில், வழக்கமாகச் சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டு, வீட்டில் யாரும் இல்லாத போது பூட்டை திறந்து உள்ளே சென்று, 31 சவரன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளி மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (42). இவர் கோவையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா சொந்தமாக பேன்சி ஸ்டோர் வைத்துள்ள நிலையில், மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
நந்தகுமார் மற்றும் அவரது மனைவி வீட்டில் யாரும் இல்லாத பெரும்பாலான வேளையில் வீட்டைப் பூட்டி விட்டு, சாவியை வெளியே வைத்து விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டில் யாரும் இல்லாத போது, சாவியை எடுத்து பூட்டை திறந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓசூரில் நூதன முறையில் நகை திருட்டு.. வைரலாகும் சிசிடிவி காட்சி!
மேலும் வீட்டுக்குள் நுழைந்ததோடு, அலமாரியில் வைத்திருந்த 31 சவரன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளி, மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். குடும்பத் தேவைக்காகத் தனியார் வங்கியில் அடகு வைத்திருந்த நகைகளை நந்தகுமார் ஒரு மாதத்திற்கு முன்பு மீட்டு வந்த நிலையில், தற்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த தங்க நகையைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.