வேலூர்/ தூத்துக்குடி: கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் கிராமத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைக் குடித்து 65க்கும் மேற்பட்ட உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உரிமம் இல்லாமல் மெத்தனால், கரைப்பான், தெளி இல்லா சாரி மெத்தனால் ஆகிய கெமிக்கல் விற்பனை தொடர்பாக மாவட்ட அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் மெத்தனால் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையிலான குழுவினர் கடந்த அக்டோபர் மாதம் முதல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மெத்தனால் விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையில், தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மெத்தனால் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய நுண்ணறிவு போலீசாருக்கு டிஜிபி உத்தரவிட்டார்.
இதையடுத்து, வேலூர் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ ராஜேஷ் தலைமையில் விஜி, நித்தியானந்தம், அன்பரசு ஆகியோர் கொண்ட குழுவினர் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மருந்துக் கடைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது, வேலூர் மெயின் பஜாரில் உள்ள ஒரு மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில், மெத்தனால் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், வேலூர் துணை கண்காணிப்பாளர் பிரிவித்ராஜ் சவுகான், காவல்துறை ஆய்வாளர்கள் சீனிவாசன், செந்தில்குமார், மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ ராஜேஷ் மற்றும் போலீசார், வருவாய்த் துறையினர் வேலூர் மெயின் பஜாரில் உள்ள கஸ்தூரி மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் திடீரென சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: போதை தரும் வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி விற்ற பெண்.... திருவான்மியூர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்!
இதில் சட்டவிரோதமாக மெத்தனால் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கடையில் 5 லிட்டரும், வேலப்பாடியில் உள்ள குடோனில் 25 லிட்டர் என மொத்தம் 30 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்தனர். மேலும், கடையின் உரிமையாளர் வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்த கஸ்தூரி ரங்கன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில் மும்பையில் இருந்து மெத்தனால் வாங்கி, தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வகங்களுக்குச் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, கடை மற்றும் வேலப்பாடியில் உள்ள 2 குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், கள்ளச்சாராயம் கும்பலுக்கு மெத்தனால் விற்பனை செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள பழைய வ.உ.சி. துறைமுகம் வழியாகப் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, பழைய துறைமுகத்திற்கு வரும் நபர்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதில் நேற்று (ஜன.22) இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தோணி மூலம் மாலத்தீவு நாட்டிற்கு 12 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா ஆயில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து மத்திய வருவாய்த் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலுக்குத் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பணிபுரிந்த மத்திய தொழிற் பாதுகாப்புப் படை வீரர் மாரிமுத்து உதவியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கடத்தலில் தொடர்புடைய சுதாகர், ஜேசுராஜ், கிங்சிலி, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் மாரிமுத்து ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.