சென்னை:ஆஸ்கார் வென்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தமது மனைவி சாய்ராபானுவை 29 ஆண்டுகள் மணவாழ்க்கைக்குப் பின்னர் பிரிகிறார். இது தொடர்பாக பிரபல வழக்கறிஞரும் விருது பெற்ற விவகாரத்து வழக்கறிஞருமான வந்தனா ஷா அறிக்கை ஒன்றின் மூலம் இந்த தகவலை நேற்று உறுதி செய்தார். ஏ.ஆர்.ரகுமான் தம்பதிக்கு ரஹீமா என 2 மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். சாய்ரா பானு சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள வழக்கறிஞர் வந்தனா ஷா, இருவரின் உறவில் ஏற்பட்ட உணர்வு பூர்வமான அழுத்தங்களால், இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
"பல ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின்னர் ரகுமானிடமிருந்து பிரியும் இந்த கடினமான முடிவை சாய்ரா எடுத்திருப்பதாகவும், இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தினாலும், கடினமான தருணங்கள் இருவரிடை இட்டு நிரப்ப முடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டது" என வழக்கறிஞர் வந்தனா ஷாவின் அறிக்கை கூறுகிறது.
விவாகரத்து குறித்த தகவலை ஏ.ஆர்.ரகுமானும் உறுதி செய்திருக்கிறார். அவர் தமது எக்ஸ் வலைத்தளத்தில் இது தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நாங்கள் முப்பதாவது ஆண்டை அடைய வேண்டும் என்று நம்பினோம். ஆனால் எல்லா விஷயங்களும் நாம் நினைப்பது போன்று நடப்பதில்லை. உடைந்த இதயங்களின் பாரத்தில் கடவுளின் சிம்மாசனமும் நடுங்கலாம். இருந்தாலும், இந்த நிலையில், வாழ்க்கைக்கான சரியான அர்த்தத்தைத் தேட முடிவு செய்துள்ளோம். ஆனால், உடைந்த துண்டுகள் தங்கள் இடத்தை மீண்டும் பெற முடியாது என்பதே உண்மை. எங்கள் நண்பர்களுக்கு, அவர்கள் பகிரும் அன்புக்கும் நன்று. இந்த சூழலை நாங்கள் கடந்து செல்லும்போது, எங்கள் தனியுரிமையை மதிப்பதற்கும் நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார்.