சென்னை: இசையமைப்பாளர் அனிருத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அறிவுரை வழங்கியுள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. ரெட் ஜெயன்ட் மூவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இயக்குநர் கிருத்திகா உதயநிதி 'வணக்கம் சென்னை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்த வணக்கம் சென்னை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத்தொடர்ந்து காளி, பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடர்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் அவர் இயக்கியுள்ள காதலிக்க நேரமில்லை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. இதனிடையே இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘என்னை இழுக்குதடி’, ‘லாவண்டர் நேரமே’ ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் காதலிக்க நேரமில்லை படத்தின் டிரெய்லர் நேற்று (ஜன.07) வெளியானது. ரொமான்டிக் டிராமா ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் எங்கேயும் காதல் போன்ற ரொமான்டிக் ஜெயம் ரவியை பார்க்க முடிகிறது என பாராட்டி வருகின்றனர். ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான ’பிரதர்’ திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்ற நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.