சென்னை: ’விடாமுயற்சி’ திரைப்பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. அஜித் நடிப்பில் கடைசியாக 2022இல் ’துணிவு’ திரைப்படம் வெளியானது. இதனைத்தொடர்ந்து அஜித் விடாமுயற்சி மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார்.
விடாமுயற்சி பயணம் தொடர்பான கதை என கூறப்படுகிறது. அஜித்குமார் தனது மனைவி த்ரிஷாவுடன் நீண்ட சாலை பயணம் செல்லும் போது அவரை ஒரு சிலர் கடத்துகின்றனர். அந்த கடத்தல் கும்பலிடம் இருந்து த்ரிஷாவை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பது தான் கதை எனவும், ஹாலிவுட் படத்தின் ரீமேக் எனவும் இணையத்தில் செய்திகள் உலா வருகிறது. அஜித், த்ரிஷா இருவரும் கௌதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு அதிக நாட்கள் அசர்பைஜான் மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் 'சவாதீகா' பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி ட்ரெண்டானது. அப்பாடலில் சீமான் பேசி, இணையத்தில் பிரபலமான மீம் டெம்ப்ளேட்டாக வலம் வந்த 'இருங்க பாய்' வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.