தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சிதம்பர விலக்கு பகுதியை சேர்ந்தவர் சென்றாய பெருமாள். முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று முன்தினம் (ஜனவரி 4) இரவு தோட்டத்திற்கு பைக்கில் சென்றுள்ளார். அங்கு அவரை கரடி ஒன்று பலமாக தாக்கியுள்ளது. கரடி தாக்கியதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துயது.
இந்த நிலையில், நேற்று (ஜனவரி 5) இறந்த சென்றாய பெருமாளின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே கரடி தாக்கி உயிரிழந்த சென்றாய பெருமாள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க அரசு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: கரூரில் யானை தந்தம் விற்க முயற்சி; சுற்றி வளைத்து பிடித்த வனத்துறை!
அதனைத் தொடர்ந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் உயிரிழந்த சென்றாய பெருமாள் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர், அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையில் முதல் கட்டமாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை சென்றாய பெருமாளின் மகன் செந்திலிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்துள்ளார்.