சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 11 பேர் மட்டுமே குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதால், அதற்கு பதில் அளிக்க ஏதுவாக விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும், இந்த வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்படவில்லை எனவும், ஒவ்வொருவரும் ஒரு திட்டத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சி போராட்டம்; அனுமதி வழங்கிய காவல்துறை ஆணையருக்கு எதிராக பாமக வழக்கு..!
இதற்கு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜி.மோகன கிருஷ்ணன், ஹமீது இஸ்மாயில், முத்தமிழ் செல்வக்குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கின் விசாரணையை இழுத்தடிக்கும் வகையில் ஒவ்வொரு முறையும் அரசு ஒத்திவைக்க கோருவதாகவும், இறுதி விசாரணை தேதியை நிர்ணயிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? அது தொடர்பாக தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதா? என கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட வாகனம் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதாககூறினார்.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது தொடர்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இறுதி விசாரணைக்காக வழக்குகளை ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.