சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய திமுக எம்பி ஆ. ராசா, '' கம்யூனிசம் செம்மையானது. ஆனால், அதை முன்னெடுத்த தலைவர்கள் நீர்த்துவிட்டதால், சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால், கம்யூனிச தத்துவங்களும் நீர்த்துவிட்டது'' என கூறினார்.
ஆ. ராசாவின் பேச்சு மாநிலத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினரை சூடாக்கியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றியுள்ள மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகள் என்று அடிப்படை தன்மை இல்லாமல் பேசியதை ஆ. ராசா திரும்ப பெற வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள சிபிஎம் தலைமை அலுவலகத்தில் அதன் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கட்சியின் 24 வது மாநில மாநாடு, விழுப்புரத்தில் ஜனவரி 3ந் தேதி முதல் 5 ந் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சார தளங்களில் கட்சி மேற்கொள்ள வேண்டிய வினைகள், எதிர்வினைகளை முடிவு செய்தோம். 25 தீர்மானங்களை நிறைவேற்றினோம் என்றார்.
போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்
துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார் என்று யூ.ஜி.சி. புதிய விதியை கொண்டு வந்ததற்கு, '' இந்த அறிவிப்பு அராஜகத்தின் உச்சம். இது உடனடியாக திரும்ப பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். ஒற்றைக் கருத்துடைய மற்ற கட்சிகளுடன் இணைந்து பேசி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என கூறினார்.
தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு செய்ததற்கு, ''இந்த போக்கை ஆளுநர் மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்றார்.
அடக்குமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்
தொடர்ந்து பேசியவர், '' திமுக பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று கூறியிருந்தனர். இன்னும் இது போன்ற முக்கியமான வாக்குறுதிகளை மாநில அரசாங்கம் செயல்படுத்த முன் வர வேண்டும் என்று கோரிக்கையை நாங்கள் வைக்கிறோம்.
ஜனநாயக ரீதியாக போராடும் போராட்டத்திற்கும் அனுமதி மறுக்கிறார்கள். போராடுகின்ற உரிமையை இந்திய சாசன சட்டத்தில் மக்களுக்காக வைத்திருக்கின்றனர். போராட்டத்தை தடுப்பது இத்தகைய அடக்குமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.
'சுயநலவாதிகள்'
மதச்சார்பற்ற முற்போக்கு கொள்கையை நிலை நிறுத்துவதில் திமுக இன்றளவும் நிலை நிற்கிறது. திமுகவின் ஆதரவு இல்லாமல் ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க சாத்தியமில்லை. ஒன்றிய பாஜகவை எதிர்க்க திமுகவோடு நின்று போராட வேண்டிய சூழல் இருக்கிறது.
திமுக எம்பி ராசா கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகள் என்பது கூறுவது மிக மிக தவறானது. ஒரு அடிப்படை தன்மை இல்லாமல் பேசி வருகிறார். அதை அவர் திரும்ப பெற வேண்டும். அதனை வன்மையாக கண்டிக்கிறாேம். அவர் தனிப்பட்ட முறையில் பேசி இருப்பார். அவரின் பேச்சை முழுமையாக கேட்க வேண்டும். அப்போது தான் தெரியும். கம்யூனிஸ்ட் தலைவர்கள் போராட்ட குணத்தை விடவில்லை'' என்றார் சண்முகம்.