சென்னை:மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை, இன்று (டிச.31) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும், மகள் இறந்ததில் இருந்து மன உளைச்சலில் இருந்து வந்த அவர், மகள் பிரிவைத் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாநகர காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி, கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் காமராஜ் (வயது 64). மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நாடகங்களில் நடித்த சித்ராவின் தந்தை ஆவார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தந்தை மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது கணவர் ஹேம்நாத் மீது புகார் அளித்திருந்தார். சமீபத்தில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், திருவான்மியூர் ராஜாஜி நகரில் மகள் சித்ரா வாங்கிய வீட்டிலேயே மனைவி விஜயா(62), பேத்தி ரேணுகா(19) ஆகிய இருவருடன் வசித்து வந்துள்ளார் காமராஜ். மேலும், காமராஜின் மகள் சித்ரா இறந்த நாள் முதல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, காமராஜ் மகள் சித்ரா இறந்ததிலிருந்து அவரது படுக்கை அறையில் தினமும் தனியாகப் படுத்துத் தூங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து காமராஜ் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து மகளின் போட்டோவை பார்த்து சற்று நேரம் கண்ணீர் சிந்தி விட்டு அதன் பிறகு தேநீர் அல்லது பால் அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். ஆனால், சித்ராவின் தாயார் இன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்து வந்து, சித்ராவின் அறையிலிருந்த காமராஜிடம் குடிப்பதற்குப் பால் கொண்டு வரவா எனக் கேட்டதாகவும், அதற்கு காமராஜ் எனக்கு ஒரு மாதிரி உள்ளது, அதனால் பால் வேண்டாம் என மனைவியிடம் கூறியதாகவும், ஆகையால் விஜயா அவரது படுக்கையறைக்குச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.