சென்னை:தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நகைச்சுவை நடிகர் கொடி கட்டிப் பறப்பார். கவுண்டமணி, செந்தில் தொடங்கி விவேக், வடிவேலு, சந்தானம், யோகி பாபு வரிசையில் தனக்கென ஒரு பாதை அமைத்து வெற்றி பெற்றவர் நடிகர் சூரி. நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, சந்தானம் எல்லாம் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கோலிவுட்டில் பாதை மாற, அந்த வெற்றிடத்தை வெற்றிகரமாக பிடித்துக்கொண்டு முன்னேறினார் சூரி.
மதுரையில் ஒரு எளிதான குடும்பத்தில் பிறந்த சூரிக்கு எல்லோரையும் போல சினிமா ஆசை வந்து சென்னைக்கு வந்துவிட்டார். இங்கு சிறிய வேலைகள் பார்த்து திரைப்படங்களில் ஒரு காட்சியில் வந்து தனது நடிப்பு ஆசைக்கு அடித்தளம் போட்டார். ‘மறுமலர்ச்சி’ படத்தில் ஒரு காட்சியில் வந்தவர், பின்னர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'வெண்ணிலா கபடிக் குழு' என்ற படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் தனது நகைச்சுவை மூலம் பிரபலமானார்.
அந்த காட்சியில் 'கோட்ட அழிங்க நான் முதல்ல இருந்து சாப்பிடுகிறேன்' என்று சொல்லி, தனக்கான எண்ணிக்கையை தொடங்கினார். திறமை ஒருபோதும் ஒருவனை கைவிடாது என்பது சூரியின் விஷயத்தில் உண்மையானது. அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரது உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
குறிப்பாக, சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்கள் சூரிக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. ரஜினியுடன் அண்ணாத்த, விஜய் உடன் ஜில்லா, அஜித் உடன் வேதாளம் ஆகிய படங்களில் நகைச்சுவை காட்சிகளில் ஜொலித்தார். இப்படி படிப்படியாக முன்னேறிய இவரை, கதாநாயகனாக மாற்றினார் வெற்றிமாறன். காமெடி நடிகர்கள் தொடர்ந்து நாயகனாக ஆசைப்பட்டு சொதப்பி வந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கிறார் என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.