சென்னை: இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், நடிகர்கள் சூரி, சசிக்குமார் ஆகியோர் நடிக்கும் படம் கருடன். இப்படத்தை லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி, இயக்குநர் வெற்றிமாறன், பாடலாசிரியர் சினேகன், சூப்பர் சுப்பு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "விடுதலைக்கு ஆதரவு கொடுத்தீர்கள். இந்த படத்துக்கு ஆதரவு கொடுங்க. வடிவுக்கரசி பேச்சு ரொம்ப பிரமாதம். சூரி காமெடியனாக இருந்து கதாநாயகனாக யோசிப்பது ரொம்ப கஷ்டம்.
விடுதலைக்கு பிறகு கருடன் மாதிரி ஒரு படம் வருவது இயற்கையும், கடவுளும் ஆசிர்வதிப்பதாக நம்புகிறேன். நீ வாழ்க வளர்க. அடுத்த படத்துக்கு மதுரை மட்டும் இல்லாமல் அகில உலகம் என பேனர் போடுற அளவு வளரட்டும்" என்று வாழ்த்தினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சூரி, "விடுதலைக்கு வந்ததுக்கு சேது மாமா வச்சு செய்றாரு. வெற்றிமாறன் கொடுத்த வாய்ப்பை தவற விட மாட்டோம் என்று நம்பிக்கையில் இருக்கிறேன். உண்மையில் இந்த மேடை எனக்கு அமையுமா என்று தெரியவில்லை.
இந்த கதை, இந்த கை தட்டல், சத்தம் எல்லாம் வெற்றிமாறனுக்குத் தான் சேரும். கதையின் நாயகனாக இந்த மேடையில் நிற்க காரணம் நீங்கள் தான். நீங்கள் விடுதலை படத்தில் கொடுத்த வாய்ப்பினால் தான் கருடன் வந்தது.
இந்தியாவில் எந்த டீக்கடையில் பேப்பர் வாங்கி பார்த்தாலும், அதில் விஜய் சேதுபதி படம் இருக்கிறது. கதையில் சசிக்குமார் அண்ணே இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பழக்கத்துக்காக மதுரைக்காரன் கொலை கூட செய்வாங்க என்றும் ஜாலியாக ( படத்தின் டயலாக் பேசியவர்) சசிக்குமாரிடம் சொன்ன போது கதையை ஒப்பு கொண்டார்.
இன்றைக்கும் நான் நகைச்சுவை நடிகராக இருந்ததற்கு காரணம் சசிக்குமார் அண்ணா தான். எனக்கு சுந்தரபாண்டியன், போராளி படத்தில் இருந்தது போல் தான் இருந்தது. சினிமா நிகழ்ச்சியாக இருந்தாலும், குடும்ப நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தோஷப்படுத்தும் தம்பி சிவகார்த்திகேயன். என் கூட பிறந்திருக்க கூடாதா என்று தோன்றும்.
வெற்றிமாறன் கிட்ட போய்ட்டா உங்களை வேற லெவலுக்கு கொண்டு போயிடுவார். எந்த இடத்துக்கும் போனாலும் உங்களுக்கான கதை வரும் என்று சிவகார்த்திகேயன் என்னை உத்வேகப்படுத்தினார். வடிவுக்கரசி அம்மா நீங்கள் வந்ததற்கு, உங்களுடன் சேர்ந்து நடித்ததற்கு பெருமையாக இருக்கிறது.
நீங்கள் நடிக்க வந்தது எங்களுக்கு மிகப்பெரிய ஆசிர்வாதம். என்னை மாதிரி ஆளுங்கள பார்க்க, பார்க்க தான் பிடிக்கும். விடுதலை படத்தின் காட்சிகளை இயக்குநர் செந்தில் பார்த்து விட்டு அந்த மீட்டரை தாண்ட மாட்டார் என்று கூறினார். சிவகார்த்திகேயனிடம் இருந்து டான்ஸ் & விஜய் சேதுபதியிடம் இருந்து பாடி லாங்குவேஜ் பிடிக்கும் அதை எடுத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.