சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலின் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமாரை திமுக தலைமை அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவேரா, திடீர் உடல் நலக்குறைவால் கடந்த 2023 ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, அந்த தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதில், மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். ஆனால், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 2024 டிசம்பர் 14ஆம் தேதி காலமானார்.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். அந்த வகையில், பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று (ஜன.10) தொடங்கியது. இந்நிலையில், திமுக கூட்டணி சார்பாக, திமுக வேட்பாளர் இடைத்தேர்தலில் வி.சி.சந்திரகுமார் களம் காணவுள்ளார். யார் அவர்? அவரது அரசியல் பின்னணி என்ன? என்பது குறித்து காணலாம்.
யார் இந்த வி.சி.சந்திரகுமார்?:
- நெசவாளர் குடும்பப் பின்னணியை கொண்டவர் வி.சி.சந்திரகுமார்.
- பொது நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பைப் படித்து முடித்துள்ளார்.
- ஜவுளி மொத்த வியாபாரியான சந்திரகுமார், 1987-ல் அதிமுகவில் வார்டு பிரதிநிதியாகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
- அதன் பின்னர் விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவரானார்.
- தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் கொள்கை பரப்புச் செயலாளராகவும், விஜயகாந்த்தின் முக்கியத் தளபதியாகவும் இருந்த இவர், 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதன்முறையாக வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் அறிவிப்பு!
- ஆனால், 2016-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த சந்திரகுமாருக்கு, திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
- மேலும், 2016-ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடவும் திமுக வாய்ப்பு வழங்கியது.
- ஆனால், அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசை எதிர்த்துப் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் தோல்வி அடைந்தார்.
- அதன் பின்னர், 2021 தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்டதால் வி.சி.சந்திரகுமாரால் போட்டியிட முடியாமல் போனது.
- 2025 இடைத்தேர்தலில் சந்திரகுமாருக்கு போட்டியிட திமுக மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.