தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

எதிரிகளை பார்த்திருக்கிறேன்.. ஆனால் துரோகிகளை இந்த தேர்தலில்தான் பார்க்கிறேன் - நடிகர் ராதாரவி பேச்சு!

Dubbing Union Election: டப்பிங் யூனியன் தேர்தலில் தலைவர் பதவிக்கு தற்போது தலைவராக உள்ள ராதாரவியை எதிர்த்து, துணைத் தலைவராக இருக்கும் ராஜேந்திரன் போட்டியிடும் நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராதாரவி, எதிரிகளை பார்த்திருக்கிறேன், ஆனால் துரோகிகளை இந்த தேர்தலில்தான் பார்க்கிறேன் என பேசியுள்ளார்.

நடிகர் ராதாரவி
துரோகிகளை இந்த தேர்தலில் தான் பார்க்கிறேன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 7:06 PM IST

துரோகிகளை இந்த தேர்தலில் தான் பார்க்கிறேன்

சென்னை:தென்னிந்திய சினிமா, சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 17ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், டப்பிங் யூனியன் தேர்தல் தொடர்பாக தலைவரும், நடிகருமான ராதாரவி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இன்று (மார்ச் 2) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இந்த தேர்தலில் நடிகரும், தற்போதைய இந்த சங்கத்தின் தலைவருமான ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார். காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலையிலும், சமீபத்தில் தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார். இந்நிலையில் தற்போது, துணைத் தலைவராக இருக்கும் ராஜேந்திரன் தலைமையில், ராதாரவிக்கு எதிராக ஒரு அணியினரும் களம் இறங்குகின்றனர். மொத்தம் 23 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராதாரவியை எதிர்த்து தலைவர் பதவிக்கு ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாரவி பேசுகையில், “இந்த முறை நடக்கும் டப்பிங் யூனியன் தேர்தலில் நான் தலைவருக்கு போட்டியிடுகிறேன். மொத்தம் 1,645 வாக்குகள் இருக்கிறது. இதுக்கே இந்த போராட்டம் என்றால், ஓட்டு எண்ணிக்கை அதிகமானால் இன்னும் போராட்டம் அதிகமாக இருக்கும். போராட்ட காலங்களில் ஒதுங்கி விடாமல், அதை எதிர்த்துதான் நிற்க வேண்டும்.

எனக்கு வேறு எந்த வருத்தமும் இல்லை, எதிரிகளை பார்த்திருக்கிறேன், ஆனால் துரோகிகளை இந்த தேர்தலில்தான் பார்க்கிறேன். அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் நிற்கிறார்கள் என்று தெரியவில்லை, ஒரு யூனியன் என்றால், என்னென்ன செய்யப் போகிறோம் என்று சொல்ல வேண்டும். இவர்கள் செய்யாததை நாங்கள் செய்வோம் என்று சொல்கின்றனர்.

10 வருடமாக உறுப்பினர் சம்பளத்தில் 10 சதவீதம் வழங்குவதை நிறுத்துவதாகச் சொன்னார்கள். 40 வருடமாககூட இருந்தும் ஏன் ஒருமுறை கூட சொல்லவில்லை? நான் தைரியமாக தன்னம்பிக்கையோடு இருக்கிறேன். நிச்சயமாக நம் அணி பெரிய அளவில் வெற்றி பெறும். இருந்தாலும் புதிய முகங்களையும், பழைய முகங்களையும் தேர்தலில் நிறுத்துகிறோம், ஆர்வம் இருப்பவர்களை சேர்த்துள்ளோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இதனால் என்ன இழப்பு என்றால், அவரிடம் முகம் கொடுத்து பேச முடியவில்லை. அதற்காக வருத்தப்பட வேண்டியதாயிருக்கிறது, நல்ல நண்பன், 40 ஆண்டு கால நண்பன். ஏதோ ஒரு பற்று இருந்திருக்கும், ஏன் நாம் தலைவராக இருந்தால் என்னவென்று. தலைவராக நான் இருந்தபோது மருத்துவமனையில் வந்து பார்த்திருக்கிறார், பேசியிருக்கிறார். இன்னும் காலம் இருக்கிறது, அதற்குள் ஏன் அவசரப்பட வேண்டும்? தலைவராக நின்றுவிட்டார்.

இந்த யூனியனை பொறுத்தவரை, நாங்கள் தொண்டர்களுடன்தான் இருப்போம். நான் வெற்றி பெற்றால், இதிலிருந்து 6 பேரை எடுத்து விடுவேன் என அவர் சொல்கிறார். முற்றிலும் உழைக்கக் கூடியவர்களை வைத்துதான் இதை செய்ய வேண்டும், தேர்தல் முடிந்ததும் யாருக்கு என்ன தேவையோ, அதை செய்வோம். என்கூடவே இருந்து இப்படி செய்து விட்டாரே என்ற வருத்தம்தான். நாங்கள் வெற்றி பெற நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த முறையும் எனக்கு வாக்களித்து ராதாரவி தலைமையிலான அணி வெற்றி பெற்றால்தான் சந்தோஷம்” என கூறினார்.

யூனியனில் 70 ரசீது ஒரே நம்பரில் இருப்பதாக, அதில் ஒரு ரசீது ஜோசப் விஜய் பெயரில் இருப்பதாகவும், மோசடி நடப்பதாகவும் ராஜேந்திரனின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த செயலாளர் கதிரேசன், “ஒரு வருடமாக அவர் இதை பார்க்காமல் என்ன செய்தார்? ஜோசப் விஜய்க்கு அவர் கட்டி இருக்கிறார். அப்போது விஜய் கட்டவில்லை, நான் கட்டுகிறேன், விஜய் கட்டினால் வேறு யாருக்காவது கட்டுங்கள் என்று சொன்னார்.

40 வருடமாக, கூட இருந்து எதுவும் கற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு இது ஒரு உதாரணம். ஸ்ருதிஹாசன், பாடகர் கார்த்தி எங்கள் மெம்பர். இவர்களுக்கு நான் சந்தா கட்டுகிறேன். ஆடிட்டர் சொன்னதன் பேரில்தான் ரசீது வழங்கப்படும்” என்று விளக்கமளித்தார்.

ராதாரவியின் வயது அதிகமாக இருப்பதால், அவரை வெற்றி பெற செய்து விட்டு, வேறு ஒருவரை தலைவராக்குவது குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்த ராதாரவி, “யூனியனை விற்கப் போவதில்லையே, சட்டப்படி யூனியனை விற்க முடியாது. நான் தலைவரானால் ஒவ்வொரு தலைவராக உள்ளே கொண்டு வரலாம் என நீங்கள் கூறுவது சரி, ஆனால் கதிரை அதில் கொண்டு வர முடியாது. ஏனெனில் அவர் செயலாளர். இதில் யாரும் சோடையானவர்கள் கிடையாது. கடந்த முறை நான் சொன்னதை அவர் இப்போது தூக்கிகொண்டு பேசுகிறார்” என கூறினார்.

லியோ படத்துக்கு சின்மயி டப்பிங் பேசிய விவகாரம் குறித்த கேள்விக்கு, “லோகேஷ் கனகராஜ்தான் கொடுக்க வேண்டும் என்பது இல்லை, அவருக்கும் விதிமுறைகள் தெரியாது. நான் போன் செய்து சொன்னதும் ஒப்புக் கொண்டார். யூனியனுக்கு பணம் வந்து விட்டது, அது போதும்” என ராதாரவி கூறினார். லியோ படத்துக்கு சின்மயியை நான் பேச விட்டதாக ராஜேந்திரன் கூறுகிறார், சின்மயியை நாங்கள் பேச விடவில்லை, இரவில் திருட்டுத்தனமாக டப்பிங் பேசியது. அதற்கு பிறகு லோகேஷ் கனகராஜிடம் ராதாரவிதான் பேசினார்”, என்று கதிரேசன் விளக்கமளித்தார்.

சின்மயியை இனிமேல் யூனியனில் சேர்ப்பது குறித்து கேட்கப்பட்டதற்கு, “சின்மயியை நாங்கள் வெளியே அனுப்பவில்லை, சந்தா கட்டாததால் யாராக இருந்தாலும் உறுப்பினர் உரிமை இருக்காது. அவர் சந்தா கட்டாததால், தனது உரிமையை அவரே இழந்து விட்டார். அவர் மீண்டும் வந்தால் நிச்சயமாக அந்த காம்பவுண்டில் கூட சேர்க்க மாட்டோம்” என்று ராதாரவி கூறினார்.

இதையும் படிங்க: டப்பிங் யூனியன் தேர்தல்; ராதாரவியை எதிர்த்து களம் இறங்கும் ராஜேந்திரன்!

ABOUT THE AUTHOR

...view details