சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்ற சொற்கள் வழக்கமான ஒன்றாகி விட்டது. ஆனால் இதனை எல்லாம் 1960களில் சாத்தியமாக்கியவர் இயக்குநர் பீம்சிங். நெஞ்சை பிழியும் குடும்பப் படங்களை இயக்கி புகழ் பெற்றவர் பீம்சிங். இவரும் நடிகர் சிவாஜியும் இணைந்து பல வெற்றிப் படங்களை இயக்கினார்.
குறிப்பாக சிவாஜி உடன் இணைந்து பாசமலர், பாலும் பழமும், பாகப் பிரிவினை, பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும் என ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இன்று இயக்குநர் பீம்சிங்கின் நூறாவது பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இதனை ஒட்டி நடிகர் பிரபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று இயக்குநர் ஏ.பீம்சிங் நூறாவது பிறந்தநாள். பீம்சிங் அவர்களின் நூற்றாண்டு. இந்த நாளில் அவரைப் பற்றி நினைக்கும் போது எனக்கு பெருமையாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
அப்பா அவரை பீம் பாய் என்றுதான் செல்லமாக அழைப்பார். அப்பா நடித்த படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர். அவரை 'செந்தாமரை' படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் முடிய தாமதம் ஆனாலும், உடனே கால்ஷீட் கொடுத்து 'அம்மையப்பன்', 'ராஜா ராணி' படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு அவர் நண்பர்களுடன் இணைந்து தயாரித்து, அவர் இயக்கிய 'பதி பக்தி' படத்திலும் நடித்தார்.
மற்ற நடிகர்களை வைத்து படங்கள் இயக்கினாலும் அப்பா (சிவாஜி) நடிப்பில் பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பெற்ற மனம், பாவ மன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பந்த பாசம், பார் மகளே பார், பச்சை விளக்கு, பழனி, பட்டத்து ராணி, சாந்தி, பாலாடை, பாதுகாப்பு போன்ற பத்தொன்பது படங்களை இயக்கினார்.