சென்னை:தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான, எதார்த்தமான படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டவர் இயக்குநர் பாலா. சமீபத்தில் பாலா இயக்கத்தில், 'வணங்கான்' (Vanangaan) என பெயரிடப்பட்ட படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.
அதனைத் தொடர்ந்து வணங்கான் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், வணங்கான் படத்தை நடிகர் அருண் விஜய்யை வைத்து இயக்குவதாகப் பாலா தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்தில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாகவும், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுத, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகப் படக்குழு சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில், வணங்கான் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அதற்கு அண்ணன் பாலாவிற்கு என் முழு முதல் நன்றி. கடின உழைப்பைத் தந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றிகள். கதாபாத்திரத்திற்காகத் தன்னை வருத்திக் கொண்டு நடித்திருக்கும் நாயகன் அருண் விஜய்க்கும் நன்றி.