ஹைதபாராத்: 'புஷ்பா 2' திரைப்பட சிறப்புக் காட்சியின் போது உயிரிழப்பு ஏற்பட்ட வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி பிரமாண்டமாக வெளியானது 'புஷ்பா 2'. இப்படத்தின் சிறப்புக் காட்சி கடந்த 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
அப்போது அந்த சிறப்புக் காட்சியை பார்க்க அல்லு அர்ஜூன் தனது குடும்பத்தாருடன் வருகை புரிந்தார். அப்போது கூட்டம் அலைமோதியது. அப்போது, திரையரங்கிற்கு குடும்பத்துடன் படம் பார்க்க வந்த ரேவதி (35) மற்றும் அவரது மகன் ஸ்ரீதேஜா (9) அந்த கூட்டத்தில் சிக்கி, ரசிகர்களின் காலில் மிதிபட்டு மயக்கமடைந்தனர். அவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனைத்தொடர்ந்து ரேவதி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அப்பெண்ணின் குடும்பத்தார் அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகம் மீது கடந்த 11ஆம் தேதியன்று வழக்குப் பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து இன்று (டிச.13) அல்லு அர்ஜூன் வழக்கறிஞர் நிரஞ்சன் ரெட்டி, இந்த ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்கும்படி கோரிக்கை வைத்தார்.