சென்னை: முரளி மற்றும் வடிவேலு இணைந்து நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' படம் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்று மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் நகைச்சுவை காட்சிகளை அன்று முதல் இன்று வரை யாராலும் மறக்க முடியாது. முரளி-வடிவேலு கூட்டணியில் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
முரளி, வடிவேலு மட்டுமல்லாமல் வினு சக்ரவர்த்தி, மணிவண்ணன், டெல்லி கணேஷ், இளவரசு, ராதா, பி.வாசு என ஒரு பட்டாளமே இந்த படத்தில் நடித்திருப்பார்கள். திலீப், அசோகன் நடித்த`ஈ பறக்கும் தளிகா' (Ee Parakkum Thalika) எனும் மலையாளப் படத்தின் ரீமேக்காக உருவானதுதான் சுந்தரா டிராவல்ஸ். மலையாள இயக்குநரான தஹா இந்த படத்தை இயக்கியிருப்பார்.

தற்போது ’சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு ‘சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்’ என்று தலைப்பிட்டுள்ளனர். முதல் பாகத்தின் முரளி-வடிவேலு கூட்டணிக்கு பதிலாக கருணாஸ் மற்றும் கருணாகரன் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். அவர்களோடு ஆடுகளம் முருகதாஸ், சாம்ஸ், ரமா, வின்னர் ராமச்சந்திரன், சிசர் மனோகர், ஆகியோர் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணன் இந்த படத்தின் மூலம் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகிறார். இவர் ’வேட்டையாடு விளையாடு’ படத்தை தயாரித்தவர். படத்தில் இளம் ஜோடிகளாக விக்னேஷ் - அஞ்சலி இருவரும் அறிமுகமாகிறார்கள். இப்படம் பற்றி இயக்குனர் கறுப்பு தங்கம் கூறியதாவது, ”இந்த கதையில் பஸ் தான் ஹீரோ அதை மையப்படுத்தி தான் அனைத்து கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறோம்.
இதையும் படிங்க: ”கமர்ஷியல் படங்கள் எல்லாம் தூக்கி அடிக்கப்படும்”... ’ராமம் ராகவம்’ பட நிகழ்வில் சமுத்திரக்கனி பேச்சு!
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அந்த பஸ்ஸை பல லட்சம் ரூபாயில் சொந்தமாக வாங்கி அதை படத்திற்கு ஏற்றார் போல தயார்படுத்தி படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். கொடைக்கானல், பன்றிமலை போன்ற இடங்களில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளிலும், தென்காசி காரைக்குடி மற்றும் சென்னை நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது” என்றார்.