தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பத்ம பூஷன் விருது: "மனைவியும், தோழியுமான ஷாலினிக்கு நன்றி" - நடிகர் அஜித்! - ACTOR AJITH THANK FOR PADMA AWARD

குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளுள் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூசன் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி, ரேசிங் நண்பர்கள், சினிமாத் துறை உள்ளிட்ட நண்பர்களுக்கு அஜித் நன்றி தெரிவித்துள்ளார்.

பத்ம பூஷன் விருது,  நடிகர் அஜித்
பத்ம பூஷன் விருது, நடிகர் அஜித் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2025, 7:39 AM IST

சென்னை:குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விபூசன், பத்ம பூசன், பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், இந்திய அளவில் பத்ம விபூசன் 7 பேருக்கும், பத்ம பூசன் 19 பேருக்கும், பத்ம ஸ்ரீ 113 பேருக்கும் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 139 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பத்ம பூசன்:

பத்ம பூசன் அறிவிக்கப்பட்ட 19 பேரில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 1. தொழில்துறையில் நல்லி குப்புசாமிக்கும்; 2. கலைத் துறையில் அஜித் குமார் மற்றும் 3. சோபனா சந்திரசேகர் ஆகியோருக்கு பத்ம பூசன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம ஸ்ரீ:

பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட 113 பேரில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதில் 1. கலைத்துறையில் குருவாயூர் துரை, 2. புரிசை கண்ணப்பா சம்பந்தன், 3. ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, மற்றும் 4. வேலு ஆசான் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதுகளை பெறுகின்றனர். 5. விளையாட்டுத் துறையில் அஸ்வின், 6. தொழில்துறையில் ஆர்.ஜி.சந்திரமோகன், 7. கல்வித்துறையில் லட்சுமிபதி ராமசுப்பையர், 8. சீனி விஸ்வநாதன், 9. அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் ஏ.டி. ஸ்ரீனிவாஸ், 10. மற்றவை சமையல் (Others culinary) பிரிவில் தாமோதரன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த தட்சணாமூர்த்திக்கு கலைப் பிரிவில் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தெரிவித்த அஜித் குமார்:

இந்நிலையில், பத்ம பூசன் விருது, பெற்ற நடிகர் அஜித் குமார் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடியரசுத் தலைவர் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதைப் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனைச் சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்பட அனைவருக்கும் எனது நன்றி.

ரேசிங் நண்பர்களுக்கு நன்றி:

உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த உதவியது. பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு கொடுத்த எனது மோட்டார் ரேசிங் நண்பர்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல், ரைஃபிள் ஷூட்டிங் நண்பர்களுக்கும் நன்றி.

மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (MMSC), இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (FMSCI), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), இந்திய தேசிய ரைஃபிள் சங்கம் மற்றும் சென்னை ரைஃபிள் கிளப் ஆகியவை ஊக்கமளித்ததற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் அளவற்ற அன்பும் ஆதரவும்தான் எனது பலம்.

இதையும் படிங்க: நடிகர் அஜித் பிரமிப்பு; கார் பந்தயம் நடத்திய தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு - வீடியோ வைரல்!

மனைவி மற்றும் ரசிகர்களுக்கு நன்றி:

இந்த நாளைக் காண என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனாலும், நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரது வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமைப்படுவார். என் அம்மாவின் நிபந்தனையற்ற அன்புக்கும், நான் என்னவாக விரும்பினேனோ அதுவாக மாற உதவிய அவரது தியாகங்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

கடந்த 25 ஆண்டுகளில் எனது அனைத்து சந்தோஷங்களிலும், வெற்றிகளிலும் துணையாக இருந்த என் மனைவியும், தோழியுமான ஷாலினி தான் எனது பக்கபலம். என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்தான் என் பெருமை மற்றும் என் வாழ்க்கையின் ஒளி ஆவார்கள். அவர்களுக்கு சிறப்பாகச் செயல்படுவது மற்றும் சரியாக வாழ்வது எப்படி என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க என்னை ஊக்குவிக்கிறீர்கள். எனது ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பும், ஆதரவுமே என்னை அர்ப்பணிப்புடன் இருக்க உந்துகிறது.

இந்த விருது என்னுடையது போலவே உங்களுக்கும் உரியது. இந்த கெளரவத்திற்கும், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் அனைவருக்கும் நன்றி. நேர்மையுடனும், ஆர்வத்துடனும் தொடர்ந்து செயல்பட நான் உறுதி பூண்டுள்ளேன். என்னுடைய பயணத்தில் நான் உற்சாகமாக இருப்பதைப் போலவே உங்கள் அனைவரது பயணமும் உற்சாகமாகவும், வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details