சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையில் புது முக நடிகர்கள் நடிக்கும் திரைப்படம் '2கே லவ் ஸ்டோரி' (2K love story). இந்த படத்தை City lights picture நிறுவனம்சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார். Creative entrepreneurs distributors நிறுவனம் வெளியிடுகிறது.
இன்றைய 2கே தலைமுறையினரின் கதையை சொல்லக்கூடிய இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் இன்று(பிப்.07) சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப் இல் 2கே லவ் ஸ்டோரி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சுசீந்திரன், இசையமைப்பாளர் டி. இமான், இயக்குனர் பிரபுசாலமன், எஸ் ஆர் பிரபாகரன், குடும்பஸ்தன் பட இயக்குனர் ராஜேஸ்வர், திரு செல்லா அய்யாவு, '2K லவ் ஸ்டோரி' படத்தின் நடிகர்களான ஜகவீர், மீனாட்சி மற்றும் சக நடிகர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் அனைவரும் இணைந்து இசை வெளியீட்டு விழா போஸ்ட்டரை வெளியிட்டனர். அதன் பின்னர் '2K லவ் ஸ்டோரி' படம் குறித்து சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பேசினர்.
2k லவ் ஸ்டோரி ((Credits: ETV Bharat Tamilnadu) குடும்பஸ்தன் பட இயக்குனர் ராஜேஸ்வர் பேசுகையில், "பள்ளி பருவத்தில் இயக்குநர் சுசீந்திரனின் ’வெண்ணிலா கபடி குழு’ படத்தை பார்த்து மிகவும் மகிழ்ந்தோம். பொதுவாகவே அனைவரும் ஒரு தலைமுறையில் இருப்பவர்கள் அடுத்த தலைமுறையில் பிறப்பவர்கள் அவர்களின் நிலையில் இருந்து சற்று குறைவாகத்தான் பேசுவார்கள். அதையெல்லாம் மாற்றி இப்போதைய தலைமுறையினர் தங்களது வாழ்க்கையை சிறப்பாக கையாளுகிறார்கள். அதன் அடிப்படையில் அற்புதமாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. " என தெரிவித்தார்.
பின்னர் பேசிய இயக்குனர் பிரபு சாலமன், "நல்ல இசை இல்லாமல் நல்ல கதையை திரையில் சொல்ல முடியாது. அப்படி நல்ல இசையை எனக்கு கொடுத்தவர் இமான். பலர் வெளியூர்களில் அல்லது வெளி நாடுகளில் இருக்க கூடிய கதையை நமது ஊரில் எடுப்பார்கள்.
ஆனால் இயக்குனர் சுசீந்திரன் தனது மண்ணுடைய கதையை அழகாக நேர்த்தியாக எப்பொழுதும் செய்து கொண்டே இருக்கிறார். இந்த இளம் தலைமுறையினருக்கு தேவையான நல்ல கதையை அற்புதமாக எடுத்திருக்கிறார். இயக்குநர் அகத்தியனின் காதல் கோட்டை திரைப்படம் தமிழ் திரை உலகத்தையே திருப்பி போட்டது.
பல்வேறு காதல் கதைகள் இருக்கும்போது, வெவ்வேறு விதமாக அவற்றை திரையில் சொல்லும் காலங்களில் பார்க்காமலே காதலிக்க முடியும் என்ற கதையை மையமாக வைத்து சுவாரசியமான திரைப்படத்தை கொடுத்தார். 40 வருடங்கள் கழித்து அந்த திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்றது. அதே போலத்தான் இந்த கதையும் உள்ளது" என்றார்.
இசையமைப்பாளர் டி இமான் பேசுகையில், "இந்த திரைப்படம் மிக விரைவாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தரத்தில் எந்த சமரசமும் இல்லை. அதற்கு காரணம் இயக்குநர் சுசீந்திரன் தான். அனைவரின் கருத்துகளையும் நன்றாக கேட்டு படத்திற்கு தேவைபட்டால் அதனை சரியாக செய்யக்கூடியவர். இந்த படம் வெற்றியடைய உங்களுடைய ஒத்துழைப்பு தேவை எனவே அனைவருக்கும் ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.
2k லவ் ஸ்டோரி ((Credits: ETV Bharat Tamilnadu) விநியோஸ்தகர் தனஞ்செயன் பேசுகையில், "மலையாள படங்களை எடுக்க கூடாது என்று கூறுகின்றனர். தமிழ் சினிமாவில் 93 சதவீத திரைப்படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது. 7 சதவீதம் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. சிலர் ஒரு திரைப்படத்தை 2 அல்லது 3 வருடங்கள் எடுத்து தயாரிப்பாளர்களை சிரமபடுத்துகிரர்கள். ஆனால் சுசீந்திரன் அவ்வாறு இல்லாமல் குறுகிய காலத்தில் படத்தை இயக்கியுள்ளார். பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் குறித்து கவலை இல்லை. அது குறித்து நமது மக்கள் நிறைய எதிர்பார்ப்புகளோடு இருக்கிறார்கள்.
டிரெய்லரில் காதல் வருவதற்கு முன் காமம் தான் வரும் என்ற வசனம் இடம் பெற்று இருந்தது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு, "காதல் வருவதற்கு முன்னாடி மனித உணர்வாக காமம்தான் முதலில் வரும். ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து அவ்வாறுதான் உள்ளது. ஒரு பெண்ணை பார்த்தவுடன் சொல்லப்படுகிற Crush என்ற வார்த்தைக்கு உண்மையான பெயர் காமம் தான். காமத்திற்கு பிறகுதான் காதல் உருவாகிறது. அனைவருக்கும் அவ்வாறுதான் உள்ளது”, என பதிலளித்தார் இயக்குநர் சுசீந்திரன்.
பாய் பெஸ்டி குறித்த கேள்விக்கு, ”இப்போது உள்ள உறவுகள் அப்போதும் இருந்தது. ஆனால் அதற்கு இப்போதுதான் பெயர் வைத்து பேசிக்கொண்டிருக்கிறோம். 2K சார்ந்தவர்கள் மட்டும் எல்லா தவறுகளை செய்வது போல கட்டமைக்கிறார்கள். ஆனல் அது அப்படி இல்லை. அவர்களது பாசிட்டிவ்வான பக்கங்களை காட்டியுள்ளேன்” என்றார் சுசீந்திரன்.
மேலும் இயக்குநர் சுசீந்திரன், “இந்த படம் 2K Kids பற்றிய படம் ஆனால் இது 90s 80s மற்ற்கும் 2K தலைமுறையின் பெற்றோர் பார்க்க கூடிய படமாக இருக்கும். அவர்களுக்கான அறிவுரையாக இருக்கும். ‘ஆதலால் காதல் செய்வீர்’ இந்த தலைமுறையினர் செய்யும் தவறுகளை குறித்து எடுக்கப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் நன்மைகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கட்டாயம் இறுதி காட்சிகள் அனைவருக்கும் பிடிக்கும். கல்லூரி மாணவர்களிடையே இந்த திரைப்படத்தை எடுத்துச் செல்ல இருக்கிறோம்" என இயக்குனர் சுசீந்திரன் பதிலளித்தார்.
இதையும் படிங்க:ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் பாராட்டு பெறும் எதிர்பாராத காம்போவின் ’பறந்து போ’
அதன் பின் படத்தின் நாயகன் ஜகவீர் பேசுகையில், "நான் கிராமத்தில் உள்ள விவசாயம் குடும்பத்தை சேர்ந்தவன். எனக்கு கிரிக்கெட் மற்றும் சினிமா மீது ஆசை அதிகமாக இருந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பிலும் விளையாட்டிலும் கவனம் செலுத்தினேன். பின்னர் நல்ல வேலை கிடைத்து ஆஸ்திரேலியாவில் பணி புரிந்தேன்.
அங்கு கிரிக்கெட் விளையாடினேன், அப்போது தோனி, விராட் கோலியோடு விளையாடியிருக்கிறேன். இந்தியாவிற்கு எதிராக கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அதன் பின்னர் தான் எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் சுசீந்திரன் இந்த படத்திற்காக என்னை தேர்வு செய்து சிறப்பாக இந்த படத்தை எடுத்துள்ளார். 'நட்பிற்கும் கற்புகள் உண்டு' என்பது தான் இந்த கதையின் ஒரு வரி" என்றார்.