தூத்துக்குடி: பண்டிகை காலங்களில் வழக்கமாக சந்தைக்கு வரும் வாழைத்தார்களில் மூன்றில் ஒரு பங்கு வாழைத்தார்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதால், தார்களின் விலை உயர்ந்து காணப்பட்டுள்ளது. விலை உயர்வின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் களைக்கட்ட தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி சந்தையில் வாழைத்தார்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை முக்கிய விவசாயமாகும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வாறு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் வாழைத்தார்கள் தூத்துக்குடி சந்தைக்கு ஏலத்திற்காகக் கொண்டுவரப்படுகிறது. வாழைத்தார் வரத்திற்கு ஏற்ப சந்தையில் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் புயல் பாதிப்பு காரணமாக ஏராளமான வாழைகள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால், இந்த முறை சந்தைக்கு வழக்கத்தை விட குறவான அளவே வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வாழைத்தார்களின் வரத்து குறைவு காரணமாக தார்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பண்டிகை காலங்களில் தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு வழக்கமாக, 15 ஆயிரம் வாழைத்தார்கள் வரும் சூழ்நிலையில், தற்போது 5 ஆயிரம் வாழைத்தார்கள் மட்டுமே வந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வாழைத்தார்கள் வரத்து குறைவு காரணமாக, வழக்கத்தை விட இரண்டு மடங்கு வாழைத்தார்கள் விலை உயர்ந்து காணப்பட்டுள்ளது.
அதன்படி, செவ்வாழை தார் ரூ.1,800 முதல் ரூ.2,000 வரையும், கற்பூரவள்ளி, நாட்டுத்தார், பச்சை, பூலாஞ்சுண்டு ஆகியவை ஒரு தார் ரூ.600 முதல் ரூ. 800 வரையும் விற்பனையாகியுள்ளது. வழக்கமாக ரூ.12 செல்லக்கூடிய கதலித்தார் விலை உயர்ந்து இருபது ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது. இதுவரையில், 10 டன் வாழைத்தார்கள் ரூ.2 லட்சம் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.