கொல்கத்தா:மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் பெண் கைதிகள் கர்ப்பமாக இருப்பதாகவும், இதுவரை 196-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்து காவலில் வளர்ந்து வருவதாகவும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள சிறைகளில் ஏற்படும் நெரிசல்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் தாமாக முன்வந்து விசாரித்தது. அதன் படி, 2018ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் வழக்கறிஞர் தபஸ் குமார் பஞ்சா (Lawyer Tapas Kumar Bhanja), அமிகஸ் க்யூரியாக (Amicus Curiae) நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, மேற்கு வங்க சிறைகளில் அவர் விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு, அமிகஸ் க்யூரி தான் மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கையினை சமர்ப்பித்துள்ளார்.
இதையும் படிங்க:மதரஸா கட்டடம் இடிப்பு; போலீசார் துப்பாக்கிச் சூட்டில் 1 பலி.. 3 பேர் கவலைக்கிடம்!
அதில், மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் பெண் கைதிகள் கர்ப்பமாக உள்ளதாகவும், இதுவரை 196 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அந்த குழந்தைகள் சிறைக் காவலில் வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சிறைச் சாலைகளில் பெரும்பாலும் ஆண் ஊழியர்களே அதிகம் உள்ளதால், பெண் கைதிகள் வைக்கப்பட்டுள்ள சிறைகளில் ஆண் ஊழியர்கள் நுழைவதற்கு தடை விதிக்குமாறு அமிகஸ் க்யூரி பரிந்துரைத்துள்ளார்.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், இந்த வழக்கின் தீவிரம் கருதி, இதனை குற்றவியல் விஷயங்களை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் பெண் கைதிகள் கர்ப்பமாக உள்ளதும், சிறைகளில் 196 குழந்தைகள் காவலில் வளர்ந்து வருவதாகவும் வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:பாகிஸ்தான் தேர்தல் முடிவு: சுயேட்சையாக களமிறங்கிய இம்ரான் கானின் ஆதரவாளர்கள் முன்னிலை!