சென்னை : இந்தியாவில், பல்வேறு மாநிலங்களில் சூரிய ஒளி மின் விநியோக ஒப்பந்தங்களை பெற, இந்திய அதிகாரிகளுக்கு ரூ. 2 ஆயிரத்து 200 கோடியை அதானி குழுமம், லஞ்சமாக கொடுத்துள்ளதாகவும், அதனை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து கடனாகவும், பத்திரங்கள் மூலமாகவும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டி, அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில், அதானி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க : அமெரிக்க நீதிமன்றம் ஊழல் குற்றசாட்டு.. டாலர் பத்திரங்களை கைவிடும் அதானி கிரீன் எனர்ஜி..!
அந்த மனுவில், இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஊழல் குறித்து அமெரிக்கா விசாரணை செய்து அம்பலப்படுத்தி உள்ள நிலையில், இந்தியாவில் உள்ள புலனாய்வு அமைப்புகள் அமைதியாக வேடிக்கை பார்ப்பது 140 கோடி இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானம் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்