சத்தீஸ்கர் (தம்தாரி): சத்தீஸ்கர் மாநிலம் குருட் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான மோக்ராவைச் சேர்ந்த சிறுவர் பித்தம் சந்திரகர். இவர் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான மயங் துருவ் மற்றும் சர்ரா பகுதியைச் சேர்ந்த ஹுனேந்திர சாஹு மற்றும் பக்கரை பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் யாதவ் ஆகிய மூவருடன் டிராக்டரில் வேளாண் கல்லூரி நோக்கிச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் வீட்டுக்கு வரும் வழியில் சர்ரா கிராமம் அருகே 100 மீட்டர் முன்பு செங்குத்தான திருப்புமுனையில் வளைய நினைத்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விபத்தில் நான்கு பேரில் மூன்று சிறுவர்கள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஒரு சிறுவர் மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிகள்: குஜராத் வன்முறைக்கு நீதி கேட்டு சட்டப்போராட்டம் நடத்திய ஜாக்கியா ஜாஃப்ரி...முதுமை காரணமாக காலமானார்!
இந்த சம்பவம் குறித்து குருட் டிஎஸ்பி மோனிகா மராவி கூறுகையில், “சமீப காலமாக சத்தீஸ்கரில் விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதுவும், இதுபோன்று சிறுவர்கள் டிராக்டர் ஓட்டி வந்து விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த விபத்தில் பித்தம் சந்திரகர் உள்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில் பக்கரை பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் யாதவ் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்” எனத் தெரிவித்தார். தற்போது, டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.