சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படம், உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'துணிவு' திரைப்படத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து வெளியாகும் அஜித்தின் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களுக்கென தனி கொண்டாட்டங்கள் மல்டிப்ளக்ஸ் தவிற மற்ற திரையரங்குகளில் நடைபெறுவது வழக்கம். அதில் ஒன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கம். இன்று காலையில் இருந்தே ’விடாமுயற்சி’ திரைப்படத்தைக் காண வெற்றி தியேட்டரில் ரசிகர்கள் குவிந்து விட்டனர்.
திரையரங்கின் முன்பு மேளதாளம் முழங்க ரசிகர்கள் நடனமாடி, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும் அஜித்குமார் நடித்த பழைய படங்களின் பாடல்களை ஒலிக்கச் செய்து அதற்கும் நடனமாடினர். மேலும் ”கடவுளே அஜித்தே” உற்சாக முழக்கமிட்டும் அஜித் ரசிகர்கள் மகிழ்ந்தனர்.
இந்நிலையில் ’விடாமுயற்சி’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள திரிஷா முதல் காட்சியை பார்ப்பதற்காக குரோம்பேட்டை வெற்றி திரையரங்கிற்கு வருகை தந்து, ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறார். அதேபோல் ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தும் வெற்றி திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறார். இருவருக்கும் அஜித் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த நிலையில் காலை 9 மணி முதல் தமிழ்நாடு முழுவதும் முதல் காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகி இருப்பதால், அதிகப்படியான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்து திரைப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்நாடு அல்லாத மற்ற பகுதிகளில் முன்கூட்டியே திரைப்படத்தை பார்த்தவர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: பல்வேறு தடைகளை தாண்டி வெளியான 'விடாமுயற்சி’... அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
மேலும் முதல் நாள் வசூலும் பெரிதாக இருக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் அஜித்குமாருடன் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.