சென்னை: சென்னை பக்கிங்காம் கால்வாய் பகுதியை ஒட்டியுள்ள குப்பை மேடு பகுதியில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள இருளர் சமூகத்தினர் தங்களுக்கு 15 ஆண்டுகளாக எந்த ஒரு அரசு சார்ந்து ஆவணங்களும் இல்லாமல், பள்ளிக்கு குழந்தைகளைச் சேர்க்க முடியாத சூழலில் வாழ்ந்து வருவதாகவும் இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூறியும் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் மண்டல அதிகாரி விஜயபாகு, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆகியோர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, இவர்களின் பின்புலன் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த விசாரணை நிறைவுப் பெற்றதை அடுத்து, நேற்று (பிப்.5) முதல் கட்டமாக சுமார் 17 குடும்பத்தினருக்கு எஸ்.டி சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருவொற்றியூர் மண்டல அதிகாரி விஜயபாகு, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் இப்ராஹிம், வட்டாட்சியர் சகாயராணி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பகுதியில் இருப்பவர்கள் பெரும்பாலும் குப்பை மேட்டில் பணிபுரிந்து வருபவர்கள், அல்லது மீன்பிடி தொழில் செய்து வருபவர்கள். இந்நிலையில் தங்களுக்கு அரசு இந்த சான்றிதழை வழங்கி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என அந்த மக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், “தற்போது உங்களுக்குச் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மிக விரைவில் சத்தியமூர்த்தி நகர்ப் பகுதியில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பில் வீடுகள் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டும். பள்ளியில் சேர்த்துவிட்டால் அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து உதவிகளும் கிடைக்கப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" - முதலமைச்சரிடம் நேரில் வலியுறுத்திய வேல்முருகன்!
மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வட்டாட்சியர் சகாயராணி கூறியதாவது, “திருவொற்றியூர் பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பழங்குடியினரான இந்த 17 குடும்பத்தினருக்கு எஸ்.டி இருளர் இன சாதி சான்றிதழ்களை வழங்கியுள்ளோம். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.