புது டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. கடந்த நவ.24 ஆம் தேதி காற்றின் தர குறியீடு (AQI) 318 ஆகப் பதிவாகியிருந்த நிலையில் திங்கள் அன்று 279 ஆக குறைந்தது. இது சற்று சாதகமாக இருந்த சூழலில் இன்று 396 ஆக உயர்ந்து டெல்லி மக்களுக்கு இடியை இறக்கியுள்ளது.
ஏற்கனவே டெல்லி பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், காற்றின் தரம் படிப்படியாக சீராகும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.
இதனால், குருகிராம், ஃபரிதாபாத், காஜியாபாத், நொய்டா போன்ற பகுதிகள் உட்பட டெல்லி-என்சிஆரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்குஹைபிரிட் முறைக்கு மாற வேண்டும் என்று காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) அறிவுறுத்தியுள்ளது. இதனால், பள்ளிகள் நேரடி மற்றும் ஆன்லைன் வாயிலாக சூழலுக்கு ஏற்பவாறு இயங்கவுள்ளன. மறு உத்தரவு வரும்வரை டெல்லியில் அதிக காற்று மாசு நிலவும் பகுதிகளில் ஹைபிரிட் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் கோர விபத்து: சாலை ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு!
டெல்லியின் தற்போதைய நிலை குறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், "மாசுபாடு நிறைந்த காற்றை சுவாசிப்பதில் பல்வேறு உடல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஒவ்வொரு வருடமும் காற்று மாசடைகிறது. ஆனால், நீங்களும் நானும் எதுவும் செய்ய முடியாது. இந்த மாசுபாட்டிற்கு அரசுதான் தீர்வு காண வேண்டும்'' என்றார்.
முன்னதாக , மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கிராப் - 4 (GRAP 4) எனப்படும் நான்காம் கட்ட கட்டுப்பாடு நடவடிக்கையை டெல்லியில் அமலுக்கு கொண்டு வந்தது. 9 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகளை மட்டுமே எடுக்க அறிவுறுத்தி இருந்தது. அதேபோல, அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து கனரக வாகனங்களும் டெல்லிக்குள் இயங்க தடை செய்யப்பட்டது. அதிலும், சிஎன்ஜி, எல்என்ஜி மற்றும் பிஎஸ்-4 ரக கனரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதே போல, டெல்லி பதிவெண் அல்லாத எந்த வாகனங்களும் டெல்லியில் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு ஒரு வார காலம் தடை செய்யப்பட்டிருந்தால், பல மாணவர்கள் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல, பல மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதில் நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இதனை கருத்தில்கொண்டு நேரடி வகுப்புகளுக்கு பள்ளிகள் தயாராகி வருகின்றன. இதனை முன்னிட்டு டெல்லியில் ஹைபிரிட் முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்