திருச்சி: வயலூர் முருகன் கோயிலில் நாளை நடைபெறும் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வரால் நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்கள் பிரபு மற்றும் ஜெயபாலன் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமூகத்தின் மிக முக்கிய அதிகார மையமான கோயில் கருவறையில் 2000 ஆண்டுகளாக நிலவி வந்த குறிப்பிட்ட சமூகத்தின் மேலாண்மை அடிப்படையிலான கருவறைத் தீண்டாமையை அகற்ற தன் வாழ்நாள் முழுக்க பெரியார் போராடினார். அவர் இறந்த போது, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் கருவறை தீண்டாமை என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டார். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் போராட்டம் இன்றளவும் நீடிக்கிறது. எப்போது முடியும் என தெரியவில்லை.
திமுக ஆட்சியின் சாதனைகள் பலவற்றில், கருவறைத் தீண்டாமையை அகற்ற முதல்வர் எடுத்த முயற்சியே வரலாறு போற்றும் நிகழ்வு. கடந்த 2021-ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் 24 பேரை கோயில் அர்ச்சகர்களாக நியமனம் செய்தார். அந்த அர்ச்சகர்களுக்கு ஏராளமான நெருக்கடிகளை இந்துத்துவ அமைப்புகள் கொடுத்து வந்தாலும் அதையும் தாண்டி சிறப்பான முறையில் கோயில்களில் பூஜை செய்து குடமுழுக்கு நடத்தி மக்கள் மத்தியில் முறையான அங்கீகாரத்தை பிராமணர் அல்லாத அர்ச்சகர்களும் பெற்றுள்ளனர்.
அனைத்து சாதி இந்துக்களும் அர்ச்சகர் ஆவதை தொடர்ச்சியாக எதிர்த்து வரும் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து அர்ச்சகர் நியமனத்துக்கு எதிராக பல்வேறு முட்டுக்கட்டைகளை உருவாக்கி உயர் மற்றும் உச்சநீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து தற்போது தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர் நியமனம் செய்ய உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். குறிப்பாக திருச்சி வயலூர் முருகன் கோயிலில் தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்ட பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் பிரபு, ஜெயபாலன் ஆகியோர் நியமனத்தை எதிர்த்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இச்சூழலில் நாளை பிப்ரவரி 19 அன்று வயலூர் முருகன் கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், தமிழக அரசின் அர்ச்சகர்களை, பரம்பரை அர்ச்சகர்கள் என்று சொல்லும் சிவாச்சாரியாரகள் ஒதுக்கி வைத்துள்ளனர். தங்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமை குறித்து அரசு அர்ச்சகர்கள் பிரபு, ஜெயபாலன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு புகார் அளித்துள்ளனர். ஆனாலும், இந்து சமய அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பரம்பரை வழி அர்ச்சகர் முறை 1972-ல் ஒழிக்கப்பட்டாலும், இன்றுவரை மதுரை மீனாட்சியம்மன், திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம் முருகன் கோயில்கள், திருவரங்கம் அரங்கநாதர், சென்னை கபாலீசுவரர் கோயில்களில் தமிழ்ச் சமுதாயத்தின் தேவர், கவுண்டர், யாதவர், வன்னியர், செட்டியார், பிள்ளை, ஆதிதிராவிடர் உள்ளிட்டோர் கோயில் கருவறையில் நுழைய முடியவில்லை என்பது கடும் வேதனைக்குரியது. அரசியல் சட்டத்தின் ஆட்சி என்பதற்கான சவால் இது. தமிழ் மக்கள் உழைப்பில் உருவாக்கப்பட்ட கோயில்களில் தமிழையும் தமிழர்களையும் நிலைபெறச் செய்ய வேண்டுகிறோம். தமிழக முதல்வரின் நேரடி தலையீடு இல்லாமல் அர்ச்சகர் மாணவர் திட்டம் - ஆலயங்களில் சமத்துவம் நிறைவேற வாய்ப்பு இல்லை.
ஆகவே, உரிய நடவடிக்கை எடுத்து, பிப்ரவரி. 19 அன்று திருச்சி வயலூர் முருகன் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் பிரபு, ஜெயபாலை பங்கேற்கச் செய்யுமாறும், ஈராயிரம் ஆண்டு கருவறைத் தீண்டாமை இருளை முழுமையாக அகற்றவும் கோருகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார்.