திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தில் ஸ்ரீ சுயம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி முதல் வாரத்தில் நடைபெறும் மாசிப் பெருந்திருவிழாவை, பெரியாங்குப்பம், விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், கன்னடிகுப்பம், சோலூர், ஆலாங்குப்பம் உள்ளிட்ட 7 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்துவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு மாசிப் பெருந்திருவிழா கடந்த 17 ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கியுள்ளது. ஒரு வாரம் நடைபெறும் திருவிழா, நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பக்தர்கள் பொங்கலிட்டும், கூழ் வார்த்தும் வழிபட்டுள்ளனர். இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான பூங்கரம் எடுக்கும் விழா நேற்றிரவு நடைபெற்றது.
இதையும் படிங்க: "பெண்கள் மற்றும் தலித் சமூகத்திற்கு எதிரான வன்முறை கவலை அளிக்கிறது"- சிபிஐ முத்தரசன்! |
இதில், பெரியாங்குப்பம் கிராம மையப்பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்திலிருந்து, சாமுண்டீஸ்வரி அம்மனை பல்வேறு மலர்களால் அலங்கரித்து, பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, தங்களது வேண்டுதல்கள் நிறைவேற பூங்கரகத்தின் மீது உப்பு, மிளகு ஆகியவற்றை தூவி வழிப்பட்டுள்ளனர்.
இந்த திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்கும் விதமாக கோயில் வளாகத்தை சுற்றி வண்ணமயமான பல்வேறு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பாக, "அமெரிக்க அதிபர் டிரம்பிற்காக வேண்டிக்கொள்ளுங்கள்" என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த பேனரில், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், “அமெரிக்க அதிபர் டிரம்ப் புகைப்படத்துடன், யாதும் ஊரே, யாவரும் கேளிர்.. மனிதநேயத்துடன் மக்களை நேசிக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கு சுயம்பு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் அருள் வழங்க பக்தகோடிகள் அம்மனை வேண்டிக்கொள்ளவும்” ஆகிய வாசகங்களும் இந்த பேனரின் இடம்பெற்றுள்ளன. இந்த பேனர் வாசகங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து அண்மையில் நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை. கால்களில் விலங்கிடப்பட்டு, அவர்கள் விமானத்தில் பயணம் செய்ய வைக்கப்பட்டனர். அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கையை மனிதாபிமானமற்ற செயல் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.