திருப்பத்தூர்: வாணியம்பாடியில் உள்ள ஜீவா நகர், நேதாஜி நகர், புதூர், ஷாகிராபாத், பஷீரா பாத், ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போவதாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு புகார்கள் குவிந்து வந்தன. இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆடு கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வந்தனர்
இந்நிலையில் குற்றவாளிகள் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்த போதும், மனம் தளராமல் ஆடுகளை பறிக்கொடுத்த ஜீவா நகர் பகுதி மக்கள், ஒன்றிணைந்து ஒரு குழு அமைத்து வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நடைபெறும் ஆட்டு சந்தையில் தினந்தோறும் சென்று பார்த்து தங்களது ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதா? என கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் அதிகமாக வரும் என வியாபாரிகள் தெரிவித்ததால் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு இரவோடு இரவாக கே.வி.குப்பத்தில் உள்ள ஆட்டு சந்தையில் காத்திருந்த போது விடியற்காலை 4 மணிக்கு முதலாவதாக ஆடுகளை ஏற்றி வந்து தம்பதி விற்பனை செய்ய தொடங்கினர்.
அப்போது அங்கிருந்த ஜீவா நகர் பகுதி மக்கள் ஆட்டை வாங்குவது போல் சென்று வியாபாரம் பேசி உள்ளனர். இரண்டு ஆடுகள் 25 ஆயிரம் ரூபாய் என விலை பேசத் தொடங்கியுள்ளனர். அந்த தம்பதியினர் கொண்டு வந்த ஆடுகள், ஜீவா நகர் பகுதியை சேர்ந்தது என்பது தெரியவந்தது.
பின்னர் 10 பேர் கொண்ட கும்பல் தம்பதியினரை சரமாரியாக தாக்கி, அவர்கள் கொண்டு வந்த ஆட்டோவில் அவர்களை அழைத்துக் கொண்டு சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர், கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு, அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தம்பதியினர் வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை, தர்மராஜர் தெருவை சேர்ந்த சபரி மற்றும் நிஷா என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த 6 மாதங்களாக வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடும்பத்துடன் வந்து மேய்ச்சலுக்காக விடப்படும் ஆடுகளை குறி வைத்து, திருடிக் கொண்டு வாரச் சந்தையில் விடியற்காலையில் கொண்டு சென்று விற்பனை செய்து வந்ததாக காவல்துறையில் ஒப்புக்கொண்டனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் அருகே வீடு புகுந்து 15 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை; 5 பேர் கைது!
அதனைத் தொடர்ந்து ஆடுகள் திருடிய தம்பதியை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ மற்றும் ஆடுகளை பறிமுதல் செய்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் ஆட்டுத் திருட்டில் ஈடுபட்ட தம்பதியினரை பொதுமக்களே பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.