சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது தமிழக கடற்கரை பகுதி நோக்கி நகர்ந்து வருவதாகவும், நாளை சூறாவளிப்புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நவம்பர் 26, 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறைப்படி, இந்த முறை சவுதி அரேபியா நாடு பரிந்துரைத்த ‘ஃபெங்கல்’ (FENGAL Cyclone) என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ.27) புயலாக வலுப்பெறக் கூடும்.
அதன் அடிப்படையில், இன்று (நவ.26) மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும்.
அதேபோல, நாளை (நவ.27) கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; திருவாரூர் தொடங்கி புதுக்கோட்டை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும். நாளை மறுநாள் (நவ.28) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிககன மழையும்; திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது.
இதுமட்டும் அல்லாது, 29ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் வருகிற 30ஆம் தேதி வரையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள், மத்திய மேற்குவங்க கடல் மற்றும் தென் மேற்குவங்க கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 6 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர்#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@KKSSRR_DMK @mp_saminathan @Chief_Secy_TN pic.twitter.com/VFjJBdTxvc
— TN DIPR (@TNDIPRNEWS) November 26, 2024
முதல்வர் ஆலோசனை: டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்டும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், பல்வேறு துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
தேர்வுகள் ஒத்திவைப்பு: கனமழை காரணமாக. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கனமழை எதிரொலியாக, நாகை. மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோன்று சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்