சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 69க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து கல்வராயன் மலைப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதன் மூலமாக கல்வராயன் மலைப் பகுதியில் என்னென்ன அடிப்படை வசதிகள் இருக்கிறது என்பதை ஆராயும் நீதிமன்றம், அங்குள்ள பேருந்து வசதி, ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை, சாலை வசதி, பள்ளி வசதி மற்றும் அங்குள்ள மக்களின் நிலை குறித்து ஒவ்வொரு வழக்கு விசாரணையிலும் தமிழக அரசிடம் கேட்டு வருகிறது.
கடந்த முறை இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, கல்வராயன் மலைப்பகுதியின் முக்கிய சாலையான வெள்ளிமலை - சின்ன திருப்பதி இடையேயான சாலை எப்போது அமைக்கப்படும்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், "மதிப்பீடு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், கூடிய விரைவில் பணிகள் முடிக்கப்படும்" என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், வெள்ளிமலை - சின்ன திருப்பதி இடையேயான சாலை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 26ஆம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்திருந்தனர்.
இதையும் படிங்க: மாணவிகளிடம் ஒழுக்கக் கேடாக நடக்கும் ஆசிரியர் சான்றிதழ்கள் ரத்து! பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு..!
அதன்படி இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வெள்ளிமலை - சின்ன திருப்பதி இடையே சாலை அமைக்க அரசு அனுமதி அளித்த பின் 12 மாதங்களில் பணி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சாலை அமைப்பதற்கான அனைத்து அனுமதிகளையும் பெற்று அறிக்கையில் கூறிய காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களை விரிவான அறிக்கையாக நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்