சித்திரதுர்கா / கர்நாடகம்: பாறை ஏறும் சாகசம், ஆபத்தில் இருக்கும் மக்களைக் காப்பது, மலைகளில் சிக்கிய உடல்களை மீட்பது போன்ற பணிகளை செய்துவரும் கோதிராஜின் உண்மையானப் பெயர் ‘ஜோத்திராஜ்’. தமிழ்நாட்டில் பிறந்த இவர், தற்போது கர்நாடகா மாநிலத்தின் ‘குரங்கு மனிதன்’ என அழைக்கப்படுகிறார். அதனாலேயே மக்கள் இவரை ‘கோத்திராஜ்’ என அன்போடு அழைக்கின்றனர்.
இதற்கு முக்கியக் காரணம் இவரின் பாறை ஏறும் சாகசம் தான். 2006-ஆம் ஆண்டு இந்த முயற்சியை தொடங்கிய கோத்திராஜ், நாடு முழுவதும் புகழ் பெற்றுள்ளார். நீர் நிலைகளில், பாறை இடுக்குகளில் சிக்கும் மக்களை மீட்கவும், இறந்தவர்கள் உடலைக் கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைப்பதும் இவரின் தலையாயப் பணி.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ‘ஜோக் அருவி’ (Jog Falls) தான் இவருக்கு மிகவும் பரிச்சயப்பட்ட இடமாகத் திகழ்கிறது. இங்கு பலமுறை தன் உயிரைப் பணயம் வைத்து உடல்களை மீட்டுள்ளார். சுமார் 850 அடி உயரம் உள்ள ஜோக் அருவியில் ஏறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது மலை ஏறுபவர்களுக்கு நன்கு தெரியும் என்று ஊர் மக்கள் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பகிர்ந்துள்ளனர். இதுவரை, உடல்களைத் தேடியும், சாகச முயற்சிக்காவும் 18 முறை ஜோக் அருவியில் ஏறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் நிதி சிக்கல்:
தற்போது இவர் பெரும் நிதி நெருக்கடியில் இருந்து வருகிறார். சொந்தமாக வீடு கூட இல்லாமல், வாடகை வீட்டில் வசித்துவரும் இவர், பல மாணவர்களுக்கு தங்குவதற்கு இடம், உண்ண உணவு ஆகியன வழங்கி மலையேற்றப் பயிற்சிக்கு தயார்படுத்தி வருகிறார்.
சிறு வயதிலேயே பெற்றோரிடமிருந்து பிரிந்த கோதிராஜ், சித்ரதுர்கா தாலுகாவின் பிஜாப்பூரில் உள்ள கொல்லரஹட்டியைச் சேர்ந்த மகாதேவப்பாவால் கோதிராஜ் வளர்க்கப்பட்டார். பின்னர், 2009 ஆம் ஆண்டில் அப்போதைய சித்ரதுர்கா மாவட்ட ஆட்சியர் ஆதித்யா பிஸ்வாஸின் உதவியுடன் தனது பெற்றோருடன் மீண்டும் இணைந்தார்.
கேள்விக்குறியான வாழ்க்கை!
தன் சகோதரிக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகக் கூறியுள்ள கோத்திராஜ், தனக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார். “சொந்த வீடில்லை, சீரான வருவாய் இல்லை, மலையேறும் போது உயிருக்கு உத்தரவாதம் இல்லையென பெண் வீட்டார் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்,” என கோத்திராஜ் நம்மிடம் பேசும்போது தெரிவித்தார்.
இதுவரை 11 அறுவை சிகிச்சைகள் இவரது உடலில் செய்யப்பட்டுள்ளது. கை, கால்களில் மொத்தம் 4 தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. இதுவரை ஜோக் அருவியில் இருந்து மட்டும் 9 உடல்களை கோத்திராஜ் மீட்டுள்ளார். ஒரு முறை அருவியில் இருந்து விழுந்து இரண்டு நாள்கள் மாயமான இவரை கண்டுபிடித்து, பொது மக்கள் மருத்துவமனையில் சேர்த்த சம்பவங்களும் நடந்துள்ளது.
கோத்திராஜின் ஆசைகள்:
மாணாக்கர்களுக்கு மலையேற்ற பயிற்சியளிக்க அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கும் இவர், வீட்டு வசதி செய்துதர வேண்டும் எனவும் கோரியுள்ளார். இப்படி நடந்தால் மட்டுமே திருமணம் செய்து சராசரி மனிதனில் வாழ்வை இவரால் வாழ முடியும் என இவரை சுற்றியிருக்கும் பொதுமக்கள் கருதுகின்றனர்.
ஒருமுறை புர்ஜ் கலிபா கட்டடத்தில் ஏறி இந்தியாவின் பெருமையை பறைசாற்றச் சென்ற கோத்திராஜுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது நம் நாட்டில் 50 மாடி கட்டடத்தில் ஏற தயாராகி வருகிறார். இதுவும் இவரின் பலநாள் கனவில் ஒன்றாக இருக்கிறது.
“யார் என்ன என்று பார்ப்பதில்லை. யார் விழுந்தாலும் என் சகோதர சகோதரிகளாக அவர்களை நினைத்து உதவுவேன். நான் எப்படி இவ்வளவு நாள் வாழ்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. இறை அருளாலும், மக்களின் துணையோடும் பிழைத்திருக்கிறேன் என்றே நம்புகிறேன்,” என்கிறார் கோத்திராஜ்.
இவரின் கனவுகள் மெய்பட்டு சராசரி மனிதனின் வாழ்வை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்பது தான் அவரின் ஏக்கமாகவும், உற்றாரின் கோரிக்கையாகவும் உள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்குஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி'பக்கத்துடன் இணைந்திருங்கள்.