பெங்களுரு:பெங்களூரு நகரில் உள்ள வைட் ஃபீல்டு (White Field) பகுதியில் இயங்கி வரும் ராமேஸ்வரம் கஃபே உணவு விடுதியில் இன்று பிற்பகலில் வெடிப்பு ஏற்பட்டது. இது திட்டமிட்ட குண்டு வெடிப்பு என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டி வருகிறது. வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற பையில் இருந்த பொருள் வெடித்ததாகவும். சிலிண்டர் வெடிப்பு அல்ல எனவும், உணவு விடுதியின் உரிமையாளர் தன்னிடம் கூறியதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் நகரின் பெயரை தாங்கியிருப்பதால், இந்த உணவகம் யாருடையது என்பதை நெட்டிசன்கள் பலர் இணையத்தில் தேடி வருகின்றனர். தமிழ்நாட்டின் ஆன்மிக நகரமான ராமேஸ்வரத்தின் பெயரைத் தாங்கியிருந்தாலும், இதன் உரிமையாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கிடையாது. பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியினரான ராகவேந்திர ராவ் மற்றும் திவ்யா ராகவேந்திர ராவ் தான் இதன் உரிமையாளர்கள். ராகவேந்திர ராவ் அடிப்படையில் மெக்கானிக்கல் என்ஜினியர். திவ்யா ராகவேந்திர ராவ், சார்ட்டட் அக்கவுண்ட்டன்ட். தொழிலில் பார்ட்னராக இணைந்த இருவரும், வாழ்விலும் இணைந்து ராமேஸ்வரம் கஃபேவை நடத்தி வருகின்றனர்.