ஐதராபாத்:18வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. பிரதமராக மூன்றாவது முறை மோடி பதவியேற்க உள்ளார். மக்களவை தேர்தலில் பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களை கைப்பற்றி இருந்த நிலையில் தற்போதைய தேர்தலில் 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம், பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.
அதேநேரம் பாஜகவுக்கு ஆதரவு தர கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஐனதா தளத்திடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதில் மாநில சிறப்பு அந்தஸ்து முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது. அப்படி சிறப்பு அந்தஸ்து என்றால் என்ன அதன் மூலம் மாநில அரசுகள் பெறும் பலன்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிறப்பு அந்தஸ்து என்றால் என்ன?
சிறப்பு அந்தஸ்து என்பது பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பின்தங்கியிருந்த மாநிலங்களின் வளர்ச்சியைப் பெருக்க ஒதுக்கப்படுவதாகும். புவியியல் மற்றும் சமூக-பொருளாதார குறைபாடுகளை எதிர்கொள்ளும் மாநிலங்களின் வளர்ச்சி விகிதத்திற்காக சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.
ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு அரசியலமைப்பில் எந்த ஏற்பாடும் இல்லை என்றாலும், 1969 இல் ஐந்தாவது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டது.
எந்த மாநிலம் முதல் முறையாக சிறப்பு அந்தஸ்து பெற்றது?
ஜம்மு மற்றும் காஷ்மீர், அசாம் மற்றும் நாகாலாந்து ஆகியவை 1969 ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட முதல் மாநிலங்களாகும். பின்னர், அசாம், நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், மிசோரம், உத்தரகண்ட் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பதினொரு மாநிலங்களுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி காங்கிரஸ் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் ஆந்திர பிரதேசத்தில் இருந்து தனி மாநிலமாக தெலங்கானாவை பிரிக்க மசோதாவை நிறைவேற்றியது. அதன் பின்னர் தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
அதன்பின் 14வது நிதிக் கமிஷன், வடகிழக்கு மற்றும் மூன்று மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, வரிப் பகிர்வு மூலம் அத்தகைய மாநிலங்களில் வள இடைவெளியை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்த பரிந்துரைத்தது. மேலும் சிறப்பு வகை மாநிலம் என்பது, மேம்படுத்தப்பட்ட சட்டமன்ற மற்றும் அரசியல் உரிமைகளை வழங்கும் சிறப்பு அந்தஸ்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். இருப்பினும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து என்பது பொருளாதார மற்றும் நிதி அம்சங்களை மட்டுமே கையாள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.