புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் அதிக பயணத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, டெல்லியில் இருந்து பிரயாக்ராஜுக்கு தினசரி விமானங்களை இயக்கப் போவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா தற்போது பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வருகிறது. இது 144-வது கும்பமேளா என்பதால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த கும்பமேளா நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில், 45 நாட்கள் அதாவது பிப்ரவரி 25-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், பக்தர்களின் தேவையை அடுத்து, டெல்லியில் இருந்து பிரயாக்ராஜுக்கு தினமும் விமானம் இயக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 25 முதல் பிப்ரவரி 28 வரை இந்த வழித்தடத்தில் விமானங்களை இயக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
"இரு மார்க்கத்திலும் வசதியான பகல்நேர புறப்பாடுகளுடன், இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு டெல்லி வழியாக தடையற்ற இணைப்புகளை விமானங்கள் வழங்கும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை பிரயாக்ராஜை இணைக்கும் வழக்கமான சேவைகளைக் கொண்டிருக்கவில்லை. கடந்த மாதம், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜை டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகியவற்றுடன் இணைக்கும் தினசரி சிறப்பு விமானங்களை இயக்கப்போவதாக அறிவித்தது.
இந்த சேவைகள் ஜனவரி 12 முதல் பிப்ரவரி 28 வரை கிடைக்கும். இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் ஆகியவையும் வெவ்வேறு நகரங்களில் இருந்து பிரயாக்ராஜுக்கு விமானங்களை இயக்குகின்றன.