திருநெல்வேலி: வடலிவிளை பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. அதில், ஆண்களுக்கு இணையாக பெண்கள் இளவட்டக்கல்லைத் தூக்கி சாகசம் செய்து அசத்தினர்.
பொங்கல் பண்டிகை என்றாலே வெறும் பண்டிகை கொண்டாட்டம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரிய மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நம் கண்முன் கொண்டு வரும் சம்பவங்கள் அதிக அளவில் நிகழும். குறிப்பாக, கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை வந்தாலே, பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஏற்பாடு செய்து உற்சாகத்தோடு பொங்கலைக் கொண்டாடி மகிழ்வார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்ட நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கிராமங்களில் தமிழர்களின் வீர விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. வீர விளையாட்டுப் போட்டி என்றாலே, தென் மாவட்டங்களில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி மிகவும் புகழ்பெற்ற போட்டியாகும். பெரும்பாலும் ஆண்கள் தான் இந்த போட்டியில் அதிகம் பங்கேற்பார்கள்.
அதிக எடை கொண்ட வட்ட அளவிலான கல்லை, இப்போட்டியில் பங்கேற்கும் இளைஞர்கள் தூக்கி தங்கள் மார்பில் வைத்து பின்னர் பின்புறமாக வீச வேண்டும். இந்த போட்டி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு போட்டியாகும். குறிப்பாக பண்டைய காலத்தில் இளவட்டக்கல் தூக்கும் இளைஞர்களுக்கு பெண் கொடுக்கும் பழக்கவழக்கம் இருந்துள்ளது.
இதையும் படிங்க: 'இந்த பொங்கலை மறக்கவே மாட்டோம்'.. சென்னை சூளைமேட்டில் கோலாகலமாக நடந்த சமத்துவ பொங்கல்...!
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் இளவட்டக்கல் தூக்கி அசத்தி வருகிறார்கள். அதாவது, திருநெல்வேலி மாவட்டம் வடலிவிளை கிராமத்தில் பொங்கல் பண்டிகை அன்று பல ஆண்டுகளாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்று வருவது வியப்பை அளித்து வருகிறது. இளவட்டக்கல் பொதுவாக சுமார் 45, 60, 80, 98 மற்றும் 129 கிலோ எடை கொண்டது. இளவட்டக்கல்லுக்கு கல்யாணக்கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இளவட்டக்கல்லை சுமப்பதில் பல படிநிலைகள் இருக்கிறது.
வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டுப் போட்டி வழக்கம்போல், நேற்று (ஜன.15) நடைபெற்றது. உரிய பயிற்சி பெற்ற இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் இப்போட்டியில் பங்கேற்றனர். அதில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் இளவட்டக்கல் தூக்கி அசத்தினர். மேலும் உரல் தூக்கும் போட்டியிலும் இளைஞர்களுக்கு இணையாக இளம் பெண்களும் உரல் தூக்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
இப்போட்டியில் உரலை ஒருகையால் ஏந்தி தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையும் நடந்தது. அதனைத் தொடர்ந்து, இப்போட்டியில் சாதனை நிகழ்த்திய பெண்கள், இளைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.