திருநெல்வேலி: நெல்லையில் இருந்து சென்னை சென்று, மறுமார்க்கம் நெல்லை திரும்பும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இனிமுதல் 16 பெட்டிகளுடன் இந்த அதிவிரைவு ரயில் சேவை இயங்கத் தொடங்கியது. இந்த ஏற்பாடு பொங்கலுக்கு ஊர் திரும்பும் மக்களுக்கு பெரும் உதவிக்கரமாக அமைந்துள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குப் பகல் நேரத்தில் விரைந்து சென்று, திரும்பும் வகையில் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ரயில்வே நிர்வாகம் சார்பில் கடந்தாண்டு நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் பயணக் கட்டணத்தின் விலை அதிகமாக இருந்தாலும், பயணிகளிடையே இந்த ரயில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த வந்தே பாரத் ரயில் நெல்லையில் இருந்து நாள்தோறும் காலை 6.05 மணிக்குப் புறப்பட்டு, மதுரைக்கு 7.50க்கும், 9.45 மணிக்கு திருச்சிராப்பள்ளி வழியாக பகல் 1.55 மணிக்கு சென்னை, எழும்பூர் சென்றடைகிறது.
இந்த ரயில் மறுமார்க்கத்தில் பகல் 2.45 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மாலை 6.35 மணிக்கு திருச்சி, இரவு 8.20 மணிக்கு மதுரை வழியாக இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடைகிறது. இந்த ரயிலில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில் மொத்தம் 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி நேரம், 50 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்நிலையில், இந்த ரயிலில் டிக்கெட்டுகள் சீக்கிரம் தீர்ந்து விடுவதால் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையும் படிங்க: மதுரை-தூத்துக்குடி ரயில் பாதைத் திட்டம் கை விடப்பட்டதா? குழப்பத்துக்கு விளக்கம் அளித்த அமைச்சர்..!
இதையடுத்து, நெல்லை - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலை 16 பெட்டிகளாக மாற்றி ஜனவரி 11ஆம் தேதி முதல் இயக்கப்போவதாக தென்னக ரயில்வே திட்டமிட்டு, அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. இந்நிலையில் இந்த கூடுதல் பெட்டிகள் பொருத்தி, இயக்கப்படுவதற்கான தேதி மாற்றி அமைக்கப்பட்டது.
More seats, more comfort, more convenience! 🚄✨
— Southern Railway (@GMSRailway) January 15, 2025
The 20665 #Chennai Egmore - #Tirunelveli Jn #vandebharatexpress has been upgraded to a 16-car rake from 8 car to meet growing demand.
The first #Journey with the 16 car rake begins today (15.01.2025)#SouthernRailway pic.twitter.com/y8KmxPtLfx
இதனைத் தொடர்ந்து, நேற்று (ஜனவரி.15) முதல் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்தது. அதற்கான முன்பதிவு ஜனவரி 11ஆம் தேதி முதல் தொடங்கியது. தொடர்ந்து நேற்று நெல்லை - சென்னை (வண்டி எண்:20666) தனது இயக்கத்தை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து 16 பெட்டிகளுடன் காலை 6.19 மணிக்குத் தொடங்கியது.
வழக்கமாக காலை 6.05 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், நேற்று 16 பெட்டிகளுடன் முதல் முறையாக இயக்கப்பட்டதால் 14 நிமிடங்கள் தாமதமாக இயக்கத்தைத் தொடங்கியது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காலகட்டத்தில் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டதால் ஏற்கனவே காத்திருப்பு பட்டியலில் இருந்த பயணிகளுக்கு இடம் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். இன்று இயக்கப்பட்ட இந்த ரயிலில் 14 சேர் கார் பெட்டிகளும், 2 எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.