கல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த போஸ், இடைத்தேர்தலில் வென்ற இரண்டு டிஎம்சி எம்எல்ஏக்களுக்கு அம்மாநில சட்டப்பேரவை தலைவர் பிமன் பானர்ஜியால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது அரசியலமைப்பிற்கு முரணானது எனக் கூறி, இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலம், பாகபங்கோலா மற்றும் பாராநகர் தொகுதியில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ரியாத் ஹுசைன் மற்றும் சயந்திகா பானர்ஜி வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பிமன் பானர்ஜி சட்டப்பேரவை விதிகள் பிரிவு 5 பகுதி 2 படி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், அவர்களின் பதவிப் பிரமாணம் அரசியலமைப்பிற்கு எதிரானது எனக் கூறி அம்மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் கடந்த திங்கள் அன்று மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி இருந்தார். அதில், சட்டப்பேரவை விதிகள் பிரிவு 5 பகுதி 2 படி எந்தவகையிலும் ஆளுநரின் அதிகாரத்தை மீற முடியாது எனக் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், ஆளுநர் மாளிகையின் வழிகாட்டுதல்களை மதிக்காத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறி, சரியான முறையில் பதவிப் பிரமாணம் செய்யாமல் சட்டசபையில் பங்கேற்கும் ஒவ்வொரு நாளுக்கும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிட்டு இருந்தார்.