புதுடெல்லி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பிப்ரவரி 18 ஆம் தேதி ஒய்வு பெறுகிறார். இதனால், புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் ஆணையர்கள் நியமனம் பொறுத்தவரை பிரதமர் முன்மொழியும் ஒருவரை குடியரசு தலைவர் நியமனம் செய்து வந்தார்.
தேடுதல் குழு
தேர்தல் ஆணையர்கள் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி உயர்த்தப்பட்டு வந்தனர். இந்நிலையில், மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, பிரதமர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுப்பதாகும். பிரதமர் தலைமையிலான இந்த தேடுதல் குழுவில் ஒரு மத்திய அமைச்சர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடம் பெறுவர். இந்நிலையில், ராஜீவ் குமார் பணி ஓய்வுக்கு பிறகு அடுத்த ஆணையர் யார் என்பதை முடிவு செய்ய இந்த குழு இன்று (பிப்.17) கூடவுள்ளது. பிரதமர் தலைமையிலான இந்த குழுவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ராஜீவ் குமாருக்குப் பிறகு, ஞானேஷ் குமார் தான் மூத்த தேர்தல் ஆணையராக உள்ளார். அவரது பெயர் பரிந்துரைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால், தேர்வுக் குழு தற்போதைய தேர்தல் ஆணையர்களில் ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்குமா அல்லது மத்திய அமைச்சரவை செயலாளர் பதவிக்கு இணையான ஒருவரை தேர்வு செய்யுமா? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: சி.பி.எஸ்.இ வினாத்தாள் கசிந்ததா? அறிக்கை வெளியிட்ட வாரியம்!
தற்போது தேர்வு செய்யப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தாண்டு பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல், 2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்கள், 2027 இல் நடைபெறவுள்ள கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துவார்.
மத்திய அரசின் திருத்தப்பட்ட சட்டத்தின்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் மத்திய அரசின் செயலாளர் பதவிக்கு நிகரான தகுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும். மேலும், தேர்தல் மேலாண்மையில் அறிவும், அனுபவமும் கொண்ட நேர்மையான நபராக இருக்க வேண்டும்.
பிரதமர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட தேடுதல் குழு இன்று இது குறித்து ஆலோசனை நடத்தும் என கூறப்படுகிறது. இந்த குழுவின் பெரும்பான்மை அல்லது ஒருமித்த கருத்தின் மூலம் புதிய தலைமை தேர்தல் ஆணையர் இறுதி செய்யப்படுவார்.