விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரியலூர் திருக்கை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் ரெமிஜியுஸ் - ஜெனிபர் தம்பதி. இவருக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகளாக குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. அதனால், ஜெனிபர் விழுப்புரத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், ஜெனிபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் கர்ப்பப்பை குழாயில் அடைப்பு இருப்பதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஜெனிப்பருக்கு 2024 ஜனவரி 27ஆம் தேதி கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் எதிர்பாராத விதமாக, சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, "லட்சத்தில் ஒருவருக்கு இது மாதிரி நடக்கும். சர்க்கரை நோய் பாதிப்பினால் இதுபோன்று நிகழ்ந்திருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார். இதனால் உறவினர்கள், அவர் இறப்பில் சந்தேகம் உள்ளது எனவும், ஜெனிபருக்கு தவறான சிகிச்சை செய்யப்பட்டதால், உயிரிழந்ததாகவும் கூறி ஏராளமானோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் நகர போலீசார் மருத்துவமனைக்கு முன்பு குவிக்கப்பட்டனர்.
அந்த போராட்டத்தின் போது பேசிய ஜெனிபரின் உறவினரான எம்சிபா, “ஜெனிபருக்கு சர்க்கரை நோய் இருக்கும்போது மைனர் அறுவை சிகிச்சை செய்யலாம் எனக்கூறி அறுவைசிகிச்சை செய்து, ஜெனிஃபரை மருத்துவர்கள் கொன்று விட்டனர். சர்க்கரை நோய் இருப்பதை மருத்துவர்கள் முதலிலேயே கூறியிருந்தால் குழந்தையே தேவை இல்லை எனக்கூறி, ஜெனிபரை வீட்டுக்கு அழைத்துச் சென்று இருப்போம்” என வேதனையுடன் அன்றைய தினம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து உறவினர்களின் கோரிக்கையை ஏற்ற போலீசார், ஜெனிபரின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி உடற்கூர் ஆய்வுக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, மருத்துவர்களின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும், அதிகளவு மயக்க மருந்து கொடுத்து தனது மனைவி உயிரிழந்ததாக ஜெனிபரின் கணவர் விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையானது விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று (பிப். 19) இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவர்கள் லேசர் அறுவை சிகிச்சையில் கவனக்குறைவாகத் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, உயிரிழந்த ஜெனிபரின் கணவருக்கு இழப்பீடாகத் தனியார் மருத்துவமனையின் நிர்வாக தலைமை மருத்துவர் மேரி புனிதா, மருத்துவர் பாலசுப்பிரமணியம், மார்க்ரேட் ஆகிய மூன்று பேரும், மருத்துவமனையின் நிர்வாகமும் இணைந்து நஷ்ட ஈடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டார். மேலும், இழப்பீட்டுத் தொகையை 45 நாட்களுக்குள் கொடுக்கவில்லை என்றால், வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் கொசு தொல்லை; கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை? அதிகாரிகள் விளக்கம்!
இந்த உத்தரவு குறித்து மனைவியை இழந்த ரெமிஜியுஸ் கூறுகையில், “எனது மனைவியை கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். அவர் உடல் நலம் நன்றாக இருந்தது. ஆனால், சிகிச்சை முடிந்து திரும்பும் போது, அவர் உயிருடன் இல்லை. இதுகுறித்து எனக்குச் சந்தேகம் இருந்ததால் வழக்கு தொடர்ந்தேன். இன்று நீதி கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.