சித்ரதுர்கா: மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனத்தின் 122வது கிளை கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவில் இன்று திறக்கப்பட்டது. புதிய கிளையை திறந்து வைத்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண், நான்கு மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் தங்களது நிறுவனத்தின் மற்றொரு மைல்கல் இது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
புதிய கிளை திறப்பு விழாவுக்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கடந்த 1962 இல், நமது நிறுவன தலைவர் ராமோஜி ராவ் அவர்களால் மார்கதர்சி சிட் ஃபண்ட் தொடங்கப்பட்டது. இன்று நான்கு மாநிலங்களில் நிறுவனத்தின் கிளைகள் பரந்துவிரிந்துள்ளன. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் மொத்தம் 121 கிளைகளுடன் நிறுவனம் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்று 122வது புதிய கிளை சித்ரதுர்காவில் உதயமாகி உள்ளது. இது, கர்நாடகா மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ள 26வது கிளையாகும். அடுத்த ஓராண்டுக்குள் கர்நாடகாவில் மேலும் ஐந்து முதல் ஆறு கிளைகளை திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது." என்று சைலஜா கிரண் கூறினார்.
நிறுவனத்தின் நிதி செயல்பாடுகள் குறித்து அவர் கூறும்போது," நடப்பு நிதியாண்டில் மார்கதர்சி சிட்ஸ் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்து சாதித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் இதனை 13 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.5 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ருபாய் வரை பல்வேறு நிதி சேமிப்புத் திட்டங்களை, மொத்தம் 2.5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் அளித்து வருகிறோம்" என்றார் அவர்.
மேலும் அவர் கூறும்போது,"விவசாயிகள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர்கள், தகவல்தொழில்நுட்ப பணியாளர்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் நம்பிக்கையை பெற்றுள்ள மார்கதர்சி சிட் ஃபண்ட், அவர்களுக்கு சிறப்பான நிதி சேவையை வழங்கி வருகிறது. பல்வேறு தரப்பைச் சேர்ந்த குடும்பத்தினருக்கும் தலைமுறை தலைமுறையாக எங்கள் சேவை தொடர்கிறது." என்று சைலஜா கிரண் பெருமிதத்துடன் கூறினார்.
தங்கள் நிதி நிறுவன சேவையின் பயன்பாடுகள் குறித்து அவர் கூறும்போது, "வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஏலத்தொகையை நிலம் வாங்குவது, வீடு கட்டுவது, தொழில் தொடங்குதல், பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமண செலவுக்காக பயன்படுத்துவது என பல்வேறு வகைகளில் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்." என்றும் அவர் தெரிவித்தார்.
மார்கதர்சி சிட் ஃபண்ட் புதிய கிளை துவக்க விழாவில், நிறுவனத்தின் கர்நாடக மாநில இயக்குநர் பி.லக்ஷமண் ராவ், துணைத் தலைவர் பலராம கிருஷ்ணா, பொது மேலாளர்கள் நஞ்சுண்டய்யா மற்றும் சந்திரய்யா, மூத்த அதிகாரிகள் விஸ்வநாத் ராவ் மற்றும் விஜயகுமார், கர்நாடகாவில் உள்ள பல்வேறு கிளைகளின் மேலாளர்கள், சித்ரதுர்கா கிளை மேலாளர் பிரவீண் பி.ஏ. மற்றும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.
சித்ரதுர்காவை சேர்ந்த வாடிக்கையாளர்கள் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது குறித்து தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர். மார்கதர்சி சிட்ஸ் நிதி சேவைகளால் தாங்கள் பயனடைந்துள்ளதாக கூறிய அவர்கள், தங்களின் பல்வேறு பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நம்பகமான நிதி நிறுவனமாக மார்கதர்சியை கருதுவதாக கூறினர்.
மார்கதர்சி சிட் ஃபண்டின் நீண்டகால வாடிக்கையாளர்களில் ஒருவரான பிரசாந்த் கூறும்போது,"விவசாயி ஆகிய எனக்கு, கடந்த 18 ஆண்டுகளாக மார்கதர்சி சிட் ஃபண்ட் பொருளாதார ரீதியாக பேருதவியாக இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் சேவையை நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறேன். வாடிக்கையாளருக்கு குறித்த நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதால், இந்நிறுவனத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். பிள்ளைகளின் கல்வி, விவசாயம் என எனது குடும்பத்தின் பல்வேறு நிதி தேவைகளை மார்கதர்சி சிட் ஃபண்ட் பூர்த்தி செய்து வருகிறது. நிறுவனத்தின் பணியாளர்களும் வாடிக்கையாளர்களை உரிய மரியாதையுடன் நடத்துகின்றனர்." என்று அவர் கூறினார்.