தேனி:ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல் தராத தேனி மாவட்ட நூலகர் ரூ.25,000ஐ தகவல் கேட்டவருக்கு வழங்க வேண்டும் என மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேனி மாவட்டம் மேலச்சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் ராமகிருஷ்ணன் என்பவர்,
மாவட்டத்தில் பல நூலகங்கள் சரியாக இயங்காமல் இருந்ததையும், மேலச்சொக்கநாதபுரம் கிளை நூலகர் திருநாவுகரசுக்கு மூன்றாம் நிலை நூலகர் பதவி உயர்வு தவறாக வழங்கப்பட்டது குறித்தும் முதல்வரின் தனிப்பிரிவிற்கு கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆன்லைனில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று முதல்வரின் தனிப்பிரில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இராமகிருஷ்ணன் அறிந்தார். எனவே, நடவடிக்கை எடுக்கப்பட்டு எழுதப்பட்ட கடிதத்தை வழங்குமாறு ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வழங்கும்படி கேட்டார். முதல்வரின் தனிப்பிரிவில் அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவில் கொடுக்கப்பட்ட16 புகார்களுக்கும் அவருக்கு தவறான பதில் வழங்கப்பட்டது.

பொது மக்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் மனு அளிக்க கூடிய முதல்வரின் தனிப்பிரிவிற்கே தவறான தகவல்களை வழங்கியும், முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தை முறைகேடாக பயன்படுத்திய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் மாநில ஆளுநருக்கு கடந்த 19.01.2018ல் இராமகிருஷ்ணன் புகார் அளித்தார். அவ்வாறு வழங்கப்பட்ட புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள ஆளுநர் அலுவலகத்திற்கு 29.03.2019ம் தேதியில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலமும் தகவல் கேட்டார். அதற்கு சரியான பதில் வராததால் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் உள்ள பிற மாநிலத்தவர்களும் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள்!"- ஆர்.என்.ரவி
இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடுவிடம் பேசிய இராமகிருஷ்ணன், "எனது மேல்முறையீட்டு மனுவின் மீது மாநில தகவல் ஆணையர் விசாரணை செய்து முறையற்ற தகவல் வழங்கிய ஆளுநர் அலுவலக பொதுத் தகவல் அலுவலரிடம் உரிய விளக்கம் கோரினார். மேலும் தேனி மாவட்ட நூலகத்துறை உரிய தகவல்களை வழங்க உத்தரவிட்டார். முதல்வரின் தனிப்பிரிவை முறைகேடாக பயன்படுத்திய அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவிற்கும் தேனி மாவட்ட நூலகத்துறை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வந்தார். மீண்டும் தகவல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.
கடந்த 3ஆம் தேதி சென்னை தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக நடைபெற்ற இறுதி விசாரணையில் 6 ஆண்டுகளாக தகவல்களை வழங்காமல் இருந்த காரணத்தினால் இழப்பீடாக ரூபாய் 25,000/- வழங்க வேண்டும் என்றும், நான் கோரிய தகவல்களை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,"என்றார்.