புதுடெல்லி: மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கும் திட்டம் மார்ச் 8-ம் தேதிக்குள் அமல்படுத்தப்படும் என்று டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
டெல்லியி்ன் முதலமைச்சராக ரேகா குப்தா இன்று (பிப்.20) பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற இதற்கான பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், உத்தரபிரதேச துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, ராஜஸ்தான் துணை முதல்வர் பிரேம் சந்த் பைர்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லியில் கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மிக்கும், பாஜக, காங்கிரசுக்கும் மும்முனை போட்டிகள் நிலவின. இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துக்கொண்டது. காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்தது.
முதல் முறை எம்எல்ஏ
இந்நிலையில், பாஜக சார்பில் முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. நேற்றைய தினம் நடந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதன்முறை எம்எல்ஏ-வான ரேகா குப்தா டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து நேற்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோருடன் துணைநிலை ஆளுநர் சக்சேனாவை சந்தித்த ரேகா குப்தா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பின்னர் ரேகா குப்தாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாகவும், புதிய அரசாங்கத்தை அமைக்க அவரை அழைப்பு விடுத்துள்ளதாகவும் துணைநிலை ஆளுநர் சக்சேனா அறிவித்தார்.
பதவி பிரமாணம்
அதன்படி, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்பு விழா இன்று பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பாஜக எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 50,000 பேர் கலந்து கொண்டனர். ரேகா குப்தாவுக்கு துணைநிலை ஆளுநர் சக்சேனா முதலமைச்சராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து அமைச்சர்களாக பர்வேஷ் சாஹிப் சிங், ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்சா, ரவீந்தர் இந்திரஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரேகா குப்தா, "பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும் என்ற பாஜக அரசின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும். மாதாந்திர உதவித் தொகையின் முதல் தவணை மார்ச் 8 ஆம் தேதிக்குள் பெண்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்" என்றார். தேர்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2,100 அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால், பாஜக மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது.
இதையும் படிங்க: டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்ற ரேகா குப்தா! யார் இவர்? கடந்து வந்த அரசியல் பாதை!
நான்காவது பெண் முதலமைச்சர்
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஷாலிமார் பாக் தொகுதியில் போட்டியிட்ட ரேகா குப்தா ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இன்று அவர் முதலமைச்சராக பதவிவேற்றதன் மூலம் டெல்லியில் நான்காவது பெண் முதலமைச்சர் ஆனார். டெல்லியில் இதுவரை சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக), ஷீலா தீட்சித் (காங்கிரஸ்) மற்றும் அதிஷி (ஆம் ஆத்மி) ஆகியோர் பெண் முதலமைச்சராக இருந்துள்ளனர். தற்போது டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சராக 50 வயதான ரேகா குப்தா பதவியேற்றுள்ளார்.
டெல்லியின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரேகா குப்தா பேசுகையில், '' பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சித் தலைமையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன். பிரதமர் நரேந்திர மோடி ஒரு சாதாரண கட்சி தொண்டரான என்னைப் போன்ற மகள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை வழங்கிய கட்சித் தலைமைக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி. எனது கதை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும். ஒரு சாதாரண நடுத்தர வர்க்கப் பெண்ணும் கட்சியின் உயர் தலைமையை அடைய ஒரு வாய்ப்பை பெற முடியும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது'' என்றார்.
ஹரியானாவின் ஜூலானாவில் பிறந்த ரேகா குப்தா டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றுள்ளார். 1992 இல் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினராக அரசியலில் நுழைந்தார். மேலும், இவர் 32 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.