டெல்லி:மக்களவை காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்களவை காங்கிரஸ் துணை தலைவர், தலைமை கொறடா மற்றும் இரண்டு கொறடாக்களை தேர்வு செய்த பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
அதில் மக்களவை காங்கிரஸ் துணை தலைவராக அசாம் எம்பி கவுரவ் கோகாய் நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல் எட்டு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேரள காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் கிஷன்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்ற எம்டி ஜாவீத் ஆகியோர் மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் மற்ற இரண்டு கொறடாக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிவிப்பை காங்கிரஸ் கட்சியி பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
17வது நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் துணை தலைவராக கவுரவ் கோகாய் மற்றும் தலைமை கொறடாவாக கொடிகுன்னில் சுரேஷ் ஆகியோர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. 18வது மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
பிரதமராக மூன்றாவது முறை மோடி பதவியேற்றுக் கொண்டார். அதேபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாதம் 24ஆம் தேதி மக்களவை கூடிய நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து வரும் 22ஆம் தேதி மீண்டும் மக்களவை பட்ஜெட் கூட்டத் தொடர் கூடுகிறது. தேர்தலுக்கு முன்னதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், தற்போது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஜூலை 23ஆம் தேதி மத்திய நிர்மலா சீதாராமன் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
இதையும் படிங்க:46 ஆண்டுகளுக்கு பின் பூரி ரத்ன பந்தர் அறை திறப்பு! தங்கம், வைர ஆபரணங்களை கணக்கெடுக்க திட்டம்! - Puri Jaganath temple ratna Bhandar