ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ரசாயன டேங்கர் லாரி விபத்தில் 8 பேர் உயிருடன் உடல் கருகி உயிரிழந்த நிலையில், 35 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில், ஒரு தொழிற்சாலை உட்பட 40 வாகனங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
உயிருடன் எரிந்த உடல்கள்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிச.20) பெட்ரோல் பங்க் முன்பு ரசாயன டேங்கர்லாரி திடீரென மற்ற வாகனங்கள் மீது மோதி உடனே தீப்பற்றியுள்ளது. அந்த தீ அடுத்தடுத்து மற்ற வாகனங்களில் பரவியுள்ளது. இதில் சிக்கிய ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 35க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது பலி எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
போலீசார் குவிப்பு
காவல்துறையினர் இதுகுறித்து கூறுகையில், பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிஎன்ஜி வாகனம் மீது ரசாயன டேங்கர் ஏற்றி வந்த லாரி மோதியதும் வாகனம் வெடித்து தீ பிடித்துள்ளது. அந்த தீ அடுத்தடுத்து பரவி மற்ற வாகனங்களும் எரிய தொடங்கின. சம்பவம் அறிந்து 20 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து கொண்டு வரப்பட்டு தீயை அணைக்க முயற்சித்து வருகிறோம். வாகனங்களில் இருந்த உடல்களையும், காயமடைந்தவர்களையும் மீட்க பாங்க்ரோடா, பிந்தயக்கா, பக்ரு, சித்ரகூட், வைஷாலி நகர், கர்னி விஹார், கர்தானி மற்றும் பல இடங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தீக்காயங்களுடன் பலர் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒன்றன் பின் ஒன்றாக, 40 வாகனங்கள் தீயில் கருகின. இந்த விபத்தில் பல சிறிய மற்றும் பெரிய வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இந்த சம்பவத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த பழுப்பு தொழிற்சாலையும் எரிந்து சாம்பலானது'' என்றார்.
அதிகாலையில் பயங்கரம்
பெட்ரோல் பம்ப் ஊழியர் மோதி சிங் கூறுகையில், "அதிகாலை 5 மணியளவில் நான் கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. திடீரென்று, அனைத்து லாரிகளும் எரிவதை பார்த்தோம். பெட்ரோல் பம்ப் அருகே பற்றிய தீயை சிலிண்டர் வைத்து அணைத்தோம். ஆனால், மற்ற வாகனங்கள் சுதாரிப்பதற்குள் எரிந்துவிட்டன'' என கூறினார்.
ராஜஸ்தான் முதல்வர் பஜனலால் ஷர்மா, '' ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு டேங்கர் தீ விபத்தில் பொதுமக்கள் உயிரிழந்த துயரச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். தகவல் கிடைத்ததும், எஸ்.எம்.எஸ் மருத்துவமனைக்குச் சென்று, தேவையான மருத்துவ வசதிகளை உடனடியாக வழங்கவும், காயமடைந்தவர்களை சரியான முறையில் கவனிக்கவும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன்'' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நிவாரணம்
பிரதமர் மோடி தமது எக்ஸ் தள பக்கத்தில், '' ராஜஸ்தானின் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளால் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளேன். விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன்.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் பிரதமர் நிதியிலிருந்து வழங்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் பிரேம் சந்த் பைர்வா, "இது ஒரு சோகமான சம்பவம். 5 பேர் இறந்தது வருத்தமளிக்கிறது. 39 பேர் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். நான் இங்கு சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகிறேன்." என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் "ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் ரசாயன டேங்கரில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் கவலை அளிக்கிறது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என அவரது பதிவில் கூறியுள்ளார்.