திருநெல்வேலி: நெல்லை, பாளையங்கோட்டையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றம் முன்பு இன்று காலை பொதுமக்களை பதற வைக்கும் வகையில் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, இன்று காலை சாலையோரம் சுமார் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை மர்ம கும்பல் அரிவாளால் மிகக் கொடூரமாக தலை, கை, கால் போன்ற பகுதியில் வெட்டி கொலை செய்துள்ளனர். ஒரு கை மணிக்கட்டுக்கு மேல் துண்டாகி தனியாக கிடந்துள்ளது.
அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் இந்த கொலை சம்பவத்தை பார்த்துள்ளனர். இருப்பினும் கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்ததால் பொதுமக்கள் யாரும் அருகில் செல்லவில்லை. தகவல் அறிந்து அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் ஊய்க்காட்டான் உடனடியாக கொலையாளிகளை நோக்கி ஓடி, அங்கிருந்த வழக்கறிஞர்கள் உதவியுடன் ராமகிருஷ்ணன் என்பவரை பிடித்தார். இதனையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் அதிரடி தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொலைக்கான பின்னணி
நெல்லை மாவட்டம், கீழநத்தம் வடக்கூர் நடுவக்குறிச்சியை சேர்ந்த பஞ்சாயத்து கவுன்சிலர் ராஜாமணி என்பவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த கொலையின் பின்னணியில் சாதிய மோதல் இருப்பதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ராஜாமணி கொலை வழக்கில் இன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாயாண்டி முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவர் குண்டர் சட்டத்திலும் கைதாகி சிறையில் இருந்தார்.
சாதிய மோதல்
இந்நிலையில்தான் ஜாமீனில் வெளிவந்த மாயாண்டி இன்று வழக்கு ஒன்றில் ஆஜராக நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இதற்கிடையே ராஜாமணி கொலைக்கு, பழிக்கு பழி தீர்க்கும் வகையில், அவரது உறவினர்கள் எதிர் தரப்பைச் சேர்ந்த மாயாண்டியை கொலை செய்ய பல நாட்களாக திட்டம் தீட்டியுள்ளனர்.
விரட்டி வெட்டி சாய்த்த கும்பல்
அந்த வகையில், இன்று எப்படியும் மாயாண்டியை தீர்த்து கட்ட வேண்டும் என்ற வெறியோடு ராஜாமணி உறவினர்களான ராமகிருஷ்ணன்(25), மனோராஜ் (27), சிவ முருகன்(19), தங்கமகேஷ்(21), முத்துகிருஷ்ணன்(26), கண்ணன்(20), கண்ணன்(22) உள்பட ஏழு வாலிபர்கள் மாயாண்டியை கேரள மாநில பதிவெண் கொண்ட காரில் பின் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.
நீதிமன்ற நுழைவு வாயிலில் மாயாண்டி பைக்கில் திரும்பும்போது, நீதிமன்றத்தில் இருந்து வெளியே காரில் வந்த கும்பல் கன்னிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனம் மீது காரை மோத விட்டு மாயாண்டியை அரிவாளுடன் விரட்டியது.
அங்கிருந்து மெயின் ரோட்டுக்கு மாயாண்டி ஓடிச் சென்ற நிலையில், அக்கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதில், அவரது கை மணிக்கட்டும், இரண்டு கால்களும் துண்டாக்கின. நிலை குலைந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஏழு பேர் கைது
உடனடியாக காரில் வந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்து பாளையங்கோட்டை போலீசார் போலீசார் அங்கு விரைந்து சென்று மாயாண்டி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ராமகிருஷ்ணனை சம்பவ இடத்தில் வைத்து வழக்கறிஞர்கள் உதவியுடன் உதவி ஆய்வாளர் ஊய்க்காட்டான் கைது செய்தனர்.
இந்நிலையில் மனோராஜ், தங்கமகேஷ், சிவ முருகன், முத்துகிருஷ்ணன், கண்ணன் எனும் பெயரில் இருவர் ஆகிய ஆறு பேர் நெல்லை தாலுகா காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதன் மூலம் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாயாண்டியை 7 பேர் கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்த நேரடி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடைபெற்றபோது அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் இந்த கொலை காட்சியை நேரடியாக தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இது காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.