சென்னை: இசைஞானி இளையராஜா நெல்லையில் நடத்திய இசை நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து உற்சாகத்துடன் புதிய அறிவிப்பு ஒன்றை இளையராஜா வெளியிட்டுள்ளார். அதில் அடுத்து எந்தெந்த ஊர்களில் இசை நிகழ்ச்சியை நடத்தவிருப்பதை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் இசைஞானி இளையராஜா தற்போதும் சிறிய பட்ஜெட் பெரிய பட்ஜெட் படம் என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அவரது இசையில் வெற்றிமாறனின் ’விடுதலை பாகம் 2’, மற்றும் ’ஜமா’ ஆகிய படங்கள் வெளியாகின.
அந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் பரவலாக ரசிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்ந்த போதிலும் இளையராஜா என்றும் குறையாத உற்சாகத்துடன் திரைப்படங்களுக்கு இசையமைப்பதை தவிர்த்து வெளிநாடுகளிலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் இளையராஜா.
கடந்த வருடம் கும்பகோணத்தில் இசை நிகழ்ச்சி நடத்தியபோதே சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களில் தனது இசை நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்திருந்தார் இளையராஜா. அதன் அடிப்படையில் பொங்கலையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 17ஆம் தேதி திருநெல்வேலியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். பெரும்பாலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மட்டுமே இசை கச்சேரி நடத்தி வந்த இளையராஜாவிற்கு, நெல்லை ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர்... உங்களை எல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்!
— Ilaiyaraaja (@ilaiyaraaja) January 20, 2025
தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சி குறித்து இளையராஜா நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், “நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது! நான் முன்பு பதிவிட்டது போல் எனது கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் கூடிய விரைவில் நடைபெறும். அடுத்து எந்த ஊர்..?” என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அடுத்து எந்தெந்த ஊர்களில் தனது இசை நிகழ்ச்சி நடைபெறும் என்பதற்கான அறிவிப்பை இளையராஜா வெளியிட்டியிருக்கிறார். தனது எக்ஸ் பக்கத்தில் “சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர். உங்களை எல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்! தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்” என இளையராஜா தெரிவித்திருக்கிறார். விரைவில் அவர் அறிவித்துள்ள மாவட்டங்களில் இசை நிகழ்ச்சி எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.
இதையும் படிங்க: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' டிரெய்லர்... இணையத்தில் வைரல்!
முன்னதாக நெல்லையில் நடைபெற்ற இளையராஜாவின் இசை நிகழ்ச்சி குறித்து இணையத்தில் பலரும் கொண்டாடி வருகின்றனர். பாடகர்கள் கார்த்திக், SPB சரண், மது பாலகிருஷ்ணன் ஆகியோர் பெரும்பான்மையான பாடல்களை பாடியது சிறந்த அனுபவமாக இருந்தது என வரவேற்று வருகின்றனர். பலரும் அடுத்து தங்களது ஊர்களிலும் இளையராஜா இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என பதிவு செய்து வந்த நிலையில் இளையராஜாவின் இந்த அறிவிப்பு இசை ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.